ஒருங்கிணைந்த உர நிர்வாக முறை
இன்றைய காலக்கட்டத்தில் விவசாயத்தில் மிக முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுவது உர மேலாண்மை ஆகும். விவசாயத்தில் அதிகமாக செலவு பிடிக்கும் விடயமாகவும் பார்க்கப்படுவது இந்த உரங்களாகும். ஒட்டுமொத்தமாக உரங்களுக்காக ஆகக்கூடிய செலவுகளை கணக்கிட்டால் கிடைக்கூடிய நிகர வருமானம் என்பது விவசாயிகளுக்கு மிகக் குறைவாகவே இருக்கும்.
விவசாயத்தில் உரங்களுக்கான செலவை குறைத்து நிகர வருமானம் அதிகம் கிடைக்க சமச்சீர் உர மேலாண்மை அவசியமானது. விவசாயத்தில் எந்த ஒரு பயிராக இருந்தாலும் அதற்கு கொடுக்கக்கூடிய உரமானது தொடர்ச்சியாக மேலும் சமச்சீராக இருப்பது அவசியம். அப்பொழுதுதான் பயிர்கள் சரியான வளர்ச்சியை அடைந்து அதிக மகசூல் கிடைக்கும்.
ஒரு பயிர் முழுமையான வளர்ச்சி அடைவதற்கு அதற்கு கிட்டத்தட்ட 16 வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவை. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை தேவையான நேரத்தில் தேவையான அளவிற்கு சரியாக சமச்சீர் முறையில் கொடுக்கும்போதுதான் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதில் ஏதாவது ஒன்றிரண்டு சத்துக்கள் கிடைக்காமல் போனால் கூட ஒரு சில வளர்ச்சி பாதிப்பும், நோய் தாக்கம் ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும்.
முதல் நிலை ஊட்டச்சத்துக்கள்
முதல் நிலை ஊட்டச்சத்துக்களைப் பொறுத்தவரையில் மூன்று வகையான சத்துக்கள் உள்ளன. அவை கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை. மேலும் பேரூட்டச்சத்துக்கள் என்று குறிப்பிடும்போது அவை நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகும். இதனை தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து என்றும் குறிப்பிடுவார்கள். இந்த மூன்று சத்துக்கள் ஒரு பயிர் வளர்வதற்கு அத்தியாவசிய மற்றும் அதிகமாக தேவைப்படும் சத்துக்கள் ஆகும். இந்த சத்துக்கள் குறைவு ஏற்படும்போது தாவரங்களின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகிறது.
இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்கள்
இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்களை நுண்ணூட்டச் சத்துக்கள் என்று குறிப்பிடுவார்கள். இந்த இரண்டாம் நிலை சத்துக்கள் தாவரத்திற்கு மிகக் குறைவாக தேவைப்படும் மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். அவை கால்சியம், மக்னீசியம் மற்றும் சல்பர் என்பவை. மேலும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன. இந்த ஒவ்வொரு ஊட்டச்சத்தும் ஒரு குறிப்பிட்ட வேலையை தாவரங்களின் செய்கின்றன. இந்த சத்துக்களில் ஏதாவது ஒன்று கிடைக்காமல் போனாலோ அல்லது பற்றாக்குறை ஏற்பட்டாலோ தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
இந்த ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களும் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதனால் அதனுடைய வேலையை மற்றவை செய்து தேவையை பூர்த்தி செய்ய முடியாது ஆகையால் அதனை ஈடுகட்ட முடியாது. எனவே ஒரு பயிர் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான நேரத்தில் சரியான அளவில் வழங்குவதே சமச்சீர் உர மேலாண்மை ஆகும்.
செயற்கை உரங்கள்
இந்த உரத் தேவையை பூர்த்தி செய்வதில் இரண்டு விதான உரங்கள் தற்போது நாம் பயன்படுத்தி வருகிறோம். அதில் முதலாவதாக இன்றைக்கு பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களில் பயன்படுத்துவது செயற்கை உரங்களே. செயற்கை உரங்களைப் பொருத்தவரை அவை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த செயற்கை உரங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட சத்துள்ள உரங்கள் மட்டும் அதிகமாக கிடைக்கூடிய வகையில் தயாரிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக என்.பி.கே உரங்களைக் குறிப்பிடலாம். இதில் மூன்று விதமான சத்துக்கள் மட்டுமே உள்ளன. அடுத்து யூரியா என்று எடுத்துக்கொண்டால் அதில் ஒரு ஊட்டச்சத்து மட்டுமே உள்ளது. ஆனால் விவசாயத்தில் குறிப்பிட்ட சத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவுகிறது.
இயற்கை உரங்கள்
இயற்கை உரங்களைப் பொறுத்தவரையில் மாட்டு சாண எரு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளின் கழிவுகள் மக்கவைத்து உரமாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும் கடலைப்புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு போன்றவையும் இயற்கை உரங்களாக தாவரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் பசுந்தாள் உரங்கள் நல்ல பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகின்றன. முதலில் சணப்பை அல்லது பயறு வகை பயிர்களை வளர்த்து அறுவடைக்கு பிறகு அவற்றை அப்படியே மடக்கி நிலத்தில் உழுது பயன்படுத்துகிறார்கள்.
மேலும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், நாஸ்டாக், அனபீனா போன்ற உயிரினங்கள் மண்ணில் வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்த உதவுகிறது. இவை இயற்கையாக மண்ணின் வளத்தை அதிகப்படுத்துகின்றன. மேலும் மண்புழு உரங்கள் மண்ணில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான பெரும்பாலான சத்துக்களை வழங்குகின்றன.
இயற்கை உரங்களில் எடுத்துக்காட்டாக மாட்டு சாண எருவில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான 16 ஊட்டச்சத்துக்களும் குறைந்த அளவில் கிடைக்கூடிய மூலப்பொருள் ஆகும். ஆனால் செயற்கை உரங்களில் குறிப்பிட்ட சத்துக்கள் மட்டுமே அதிக அளவில் கிடைக்கிறது. எனவே ஒரு முழுமையான ஊட்டச்சத்து மிக்க ஒரு உரம் என்றால் அது இயற்கை உரங்கள்தான். இந்த மாட்டு சாண எருபோன்ற விலங்குகளின் கழிவுகளிலிருந்து கிடைக்கும் எருவினது மண்ணில் மக்கும்போது தொடர்ச்சியாக செடிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க ஏதுவாகிறது.
செயற்கை உரங்களின் பாதிப்புகள்
நமது முன்னோர்கள் பயன்படுத்திய உரங்கள் முற்றிலுமாக இயற்கை உரங்கள் ஆகும். இதனால் அவர்களால் நல்ல தரமான பயிர்களையும், நல்ல மகசூலையும் எடுக்க முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகள் அனைவரும் செயற்கை உரங்களை பயன்படுத்த துவங்கி இன்று நமது மண் முழுவதிலும் செயற்கை உரங்களை நிரப்பி மண்ணை மலடாக்கி வைத்து இருக்கிறோம். இதனால் மண்வளம் குறைகிறது. ஒரு முறை செய்றை உரங்களை பயன்படுத்தும்போது நிலத்தில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இல்லாமல் போகின்றன. இதனால் நிலத்தில் உயிர் பன்மய சுழற்சி பாதிக்கப்படுகிறது. அடுத்த முறை இயற்கையாக பயிர்கள் வளர்வதற்கு தடைபடுகிறது. அதற்காக மீண்டும் செயற்கை உரங்களை மூட்டை மூட்டையாக வாங்கி கொட்ட வேண்டிய தேவை ஏற்படுகிறது. எதிர்பார்த்த அளவிற்கு விளைச்சலும் தொடர்ச்சியாக கிடைக்காமல் போகிறது.
இயற்கையான உரங்களை தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது நிலத்தில் ஒரு உயிர் பன்மய சுழற்சி ஏற்படுகிறது. இதனால் இயற்கையாக நிலத்தில் உள்ள நன்மை செய்யும் உயிரினங்களும் மண்புழுக்களும் மண் வளத்தை பெருக்கி அடுத்தடுத்து பயிரிடும்போது நல்ல மகசூலை அள்ளித் தருகிறது. இயற்கை உரங்களை பொறுத்தவரையில் ஊட்டச்சத்துக்கள் அளவு குறைவாக இருந்தாலும், அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் தாவரங்களுக்கு சீராக கிடைக்க வழிவகை செய்கிறது.
எனவே விவசாய பெருமக்கள் மேற்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி இயற்கை உரங்கள் பயன்படுத்தி நல்ல மகசூல் பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். தேவை ஏற்பட்டால் தவிர செயற்கை உரங்களை தவிர்க்க வேண்டும். அப்படியே பயன்படுத்தினால் கூட செயற்கை உரங்களை பயன்படுத்திய பிறகு நீண்ட நாட்களுக்கு உயிர் உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
காரணம் செயற்கை உரங்களை பயன்படுத்திய நிலம் முற்றிலும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான நிலமாக இருக்கும். எனவே அந்த நிலத்தில் உயிர் உரங்களை கொண்டு சேர்ப்பது எந்த வகையிலும் பலன் அளிக்காது. எனவே நிலத்தின் நச்சுத்தன்மை நீங்குவதற்கு நீண்ட இடைவெளி விட்டு இயற்கையான உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும்.
உங்கள் பார்வைக்கு:
கொய்யா சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள்
Post Comment