கரும்பு பயிர்களில் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்
தற்பொழுது தமிழ்நாட்டின் வட கிழக்கு மாவட்டங்களில் பரவலாக கரும்பில் குருத்து மாவு பூச்சியின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இது குருத்தை தாக்குவதால் குருத்தின் நுனிகள் ஒன்றாக இணைந்து கரும்பின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். குருத்து மாவு பூச்சியானது தொடர்ச்சியாக கரும்பின் சாறை உறிஞ்சி குடிப்பதால் கரும்பின் கணுக்களின் வளர்ச்சி குறைந்து கணுக்கள் அருகருகே தோன்றிவிடும்.
மாவு பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகள்
இதனால் ஒரு ஆறு மாதங்களில் ஐந்தடி முதல் ஆறடி வரை வளர வேண்டிய கரும்பானது மூன்றடி அல்லது மூன்று அடிக்கு குறைவாகவும் தன்னுடைய வளர்ச்சியை கொடுக்கும். இதன் மூலம் மகசூல் இழப்பு அதிகமாக விவசாயிகளுக்கு ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக சென்ற மாதம் கரும்பு பயிரிடும் மாவட்டங்களான சேலம், பெரம்பலூர், அரியலூர் கள்ளக்குறிச்சி, விருதாச்சலம் போன்ற இடங்களை மட்டுமல்லாமல் விழுப்புரம் மாவட்டத்திலும் பரவலாக இந்த பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான இடங்களில் இக்குறுத்து மாவு பூச்சியின் தாக்குதல் மருந்து அடிக்கப்பட்ட வயல்களில் குறைவாக காணப்படுவதாக அறியப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக போர்க்கால நடவடிக்கைகளில் விவசாயிகள் இறங்கியாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தும் முறைகள்
அதன்படி நாம் கரும்பு நடவு செய்யும்பொழுது நல்ல விதைக்கருணைகளை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்த விதை கருணைகளை கார்பன்டாஸின் 70 wp என்ற கரைசலில் இரண்டு கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலைந்து 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு அதை எடுத்து 70w s என்ற கலவையில் 1.5 ml ஒரு லிட்டர் தண்ணீருக்கு கலந்து ஐந்து நிமிடங்கள் ஊறவைத்து பின்பு கருணைகளை நாம் வயலில் நட வேண்டும். இவ்வாறு நடும் பொழுது குருத்து மாவுப் பூச்சிகளின் தாக்குதல் குறைவாக காணப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் வயல் ஓரங்களில் எறும்புகளின் நடமாட்டத்தை அவ்வப்பொழுது கண்காணிக்க வேண்டும். அவ்வாறு எறும்புகள் நடமாட்டம் இருப்பின் அத்தோகைகளை உரித்துப் பார்த்தால் அத்தோகைகளுக்கும் உள்ளே இம்மாவுச்சியானது இருக்கும். இவை வெள்ளை நிறத்தில் திட்டு திட்டாக கொத்துக்கொத்தாக காணப்படும். இவை கரும்பின் கணுக்களுக்கு அருகில் இருப்பதால் தொடர்ச்சியாக சாறு உறிஞ்சி குடிப்பதால் கணுக்களில் வேர்கள் வளர்ந்து செடிகள் வளர்ச்சி குன்று விடும். இதை தடுப்பதற்காக பூச்சிக்கொல்லிகளை அடிக்க வேண்டும்.
மாவுப் பூச்சிக்களை கட்டுப்படுத்தும் மருந்துகள்
இதில் முதலாவதாக வயல் ஓரங்களில் மூன்று வரிசை வரை 17.8 SL என்ற மருந்தினை 3 மில்லி 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவிலும், 18.5 SC என்ற மருந்தினை நான்கு மில்லி 10 லிட்டர் என்ற அளவிலும், 150 WD என்ற மருந்தினை ஐந்து மில்லி 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவிலும் பயிரோடேட்டா 150 DG என்ற மருந்தினை 12.5 மில்லி பத்து லிட்டர் என்ற அளவில் நாம் தெளிக்க வேண்டும். மேலும் 50 WG என்ற மருந்தை 3 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு கலந்து தெளிப்பது கரும்பு குருத்து மாவு பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்க உதவும்.
மேற்குறிப்பிட்ட மருந்துகளை 20 நாட்களுக்கு ஒரு முறை குருத்து மாவுப்பூச்சிகளின் தாக்குதல் 10 சதவிதத்திற்கும் அதற்கு அதிகமாக தென்படும் பொழுது அடிக்க வேண்டும். மருந்தினை தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக அடிக்க வேண்டும் ஒரே மருந்தினை அடுத்தடுத்து தெளிக்கக் கூடாது. இவ்வாறு தெளிப்பதினால் பூச்சிகளுக்கு மருந்தின் எதிர்ப்பு தன்மை உருவாகிவிடும். அதுமட்டுமில்லாமல் வயல்களில் கரும்பு நடவு செய்து 150வது நாட்கள் கரும்பின் தோகைகளை உரித்து பட்டம் கட்டிவிட வேண்டும். இவ்வாறு பட்டம் கட்டி கரும்பு தோகையை உரிப்பதனால் இம்மாவு பூச்சியின் தாக்குதல் குறைவாக காணப்படும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
அது மட்டுமில்லாமல் இம்மாவு பூச்சியானது நடவு நட்ட பயிர்களை விட மருதாம்பு பயிர்களில் அதிகமாக காணப்படுகிறது. அதனால் மருதாம்பு பயிர்கள் அல்லது கட்டைப் பயிர்களை இரண்டு முறைக்கு மேல் நாம் விடுவதை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டால் இக்குருத்து மாவுப்பூச்சியின் தாக்குதலை வெகுவாக நாம் கட்டுப்படுத்தி விட முடியும்.
மஞ்சள் ஒட்டும் ஒட்டைகளைப் பயன்படுத்தும் போது கரும்பினை பாதிக்கும் பல்வேறு பூச்சியினங்கள் அவற்றால் ஈர்க்கப்படுகின்றன. இவ்வாறு ஈர்க்கப்படும் பூச்சிகள் இந்த மஞ்சள் ஒட்டும் அட்டைகளில் ஒட்டிக்கொண்டு சிக்கிக் கொள்கின்றன. இந்த முறையில் நூற்றுக்கணக்கான பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடிகிறது. பூச்சிகளின் முட்டைகள், லார்வாக்கள் மற்றும் முதிர்ச்சியடைந்த பூச்சிகள் போன்றவற்றை கட்டுப்படுத்த இந்த அட்டைகள் பயன்படுகின்றன.
கரும்புகளை பாதிக்கும் சிம்பான் சிலந்தி
இது மட்டுமில்லாமல் தற்பொழுது கரும்பு பயிரானது சிம்பான் சிலந்தி என்ற ஒரு வகை சிலந்தியின் தாக்குதல் பரவலாக பாதிக்கப்படுகிறது. இச்சிலந்தியானது வெயில் அதிகமான நேரங்களிலும் பனிமூட்டமாக இருக்கும் பொழுதும் இத்தாக்குதல் வெகுவாக அதிகரிக்கிறது. இது இலைகளை சிறுசிறு கண்கள் போல் இலைகளின் பச்சயத்தை சுரண்டி பின்பு அதன் மேல் பூஞ்சானம் போல் ஒரு மூடாக்கு இட்டுவிடுகிறது. சிலந்திகள் எல்லாம் வலை பின்னுவது போல் வலை பின்னிவிடும். தொடர்ச்சியாக இவ்வாறு இச்சிலந்தி அந்த குழிக்குள் இருந்து கொண்டு மேலே வரை பரவி இருப்பதால் நாம் என்ன மருந்து சிலந்தி கொல்லிகளை அடித்தாலும் அதனுடைய தாக்குதல் வெகுவாக இருக்கிறது.
இதை கட்டுப்படுத்த இச்சிலந்திகள் ஆரம்பத்தில் வயல் ஓரங்களில் ஒரு சில வரிசை களில் முதலில் தென்படும். பின்பு காற்றடிக்கும் திசை நோக்கி 15 முதல் 20 நாட்களுக்குள் மெதுவாக ஐந்தாவது வரிசை ஏழாவது வரிசை என கொஞ்சம் கொஞ்சமாக பரவும். இவ்வாறு பரவும் சிலந்திகளை நாம் சிலந்திக் கொல்லிகள் மூலம் கட்டுப்படுத்தி பயிர்களில் நல்ல மகசூல் எடுக்கலாம். இவ்வாறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்வதன் மூலமும் கட்டைப் பயிர்களில் 60வது நாளுக்கு முன்பாகவே உரங்கள் இட்டு மண்ணை அணைத்து பயிர் பாதுகாப்பு முறைகளை முறையாக செய்வதன் மூலமும், முறையாக நீர் பாசனம் செய்வதன் மூலமும் இக்குருத்து மாவு பூச்சிகள் மற்றும் மற்ற தொல்லை தரும் பூச்சிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தி நல்ல மகசூல் எடுக்கலாம்.
உங்கள் பார்வைக்கு:
நெல் குருத்துப் பூச்சியின் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள்
Post Comment