கொய்யா சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள்
கொய்யா சாகுபடிக்கு உகந்த காலநிலை 23 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரிசெல்சியஸ் உள்ள வெப்பநிலைதான் உகந்த காலநிலையாகும். அதுக்கு மேல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் கொய்யா மரத்தில் பூ பூப்பதும், பிஞ்சுகள் பிடிப்பதும் மிகக் குறைவாக இருக்கும்.
வெள்ளை மற்றும் சிவப்பு ரகங்கள்
கொய்யா அடுத்து கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் கொய்யாவின் ரகங்கள். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவலாக பலதரப்பட்ட கொய்யா வகைகள் பயிரிடப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கொய்யா சதையின் நிறத்தைப் பொறுத்து இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை வெள்ளை நிற சதைப்பற்றுள்ள கொய்யா வகை ரகங்கள், சிவப்பு நிற சதைப்பற்றுள்ள கொய்யா வகை ரகங்கள்.
வெள்ளை நிற கொய்யா ரகங்கள்
முதலில் வெள்ளை நிற சதைப்பற்றுள்ள ரகங்களைப் பொறுத்தவரையில் குறிப்பாக அலகாபாத் சஃபேடா மற்றும் லக்னோ – 49 என்ற இந்த இரண்டு ரகங்களும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பயிரிடப்படுகின்ற வகையாகும். சமீப காலங்களில் தாய்லாந்து கொய்யா என்கிற கேஜி கொய்யா என்பார்கள் இந்த ரகம் விவசாயிகள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ள ரகமாகும்.
சிவப்பு நிற கொய்யா ரகங்கள்
சிவப்பு நிற சதைப்பற்றுள்ள கொய்யா ரகங்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. அதனால் தற்பொழுது விவசாயிகள் சிவப்பு நிற சதைப்பற்றுள்ள ரகமான அருக்கா கிரண் மற்றும் லலித் போன்ற ரகங்களை நல்ல தரமான நர்சரிகளிலிருந்து பெற்று நடவு செய்து அதிக மகசூல் பெற்று வருகின்றனர்.
விதைகளைக் கொண்டு நாற்றுகள் தயார் செய்து நடவு செய்யும்போது அது தாய்செடியினை ஒத்திருக்காது. அதன் வளர்ச்சி சுவை மற்றும் அளவு ஆகியவை வேறுபாடு காணப்படும். மேலும் இவற்றில் மகசூல் மிகக் குறைவாக இருக்கும். இவ்வகையான செடிகள் உருவாக்குகின்ற பழங்களின் தரமும் மிக குறைவாக இருக்கும். எனவே விதைகளின் உருவாக்கப்படும் நாற்றுகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து, விதைகள் இல்லாமல் உருவாக்கப்படும் நாற்றுகளை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.
தென்னிந்தியாவை பொறுத்தவரை பதியம் செய்யப்பட்ட கன்றுகளையே நடவு செய்கிறார்கள். எனவே நீங்களும் ஒரு தரச்சான்றிதழ் பெற்ற நர்சரியிலிருந்து கொய்யா கன்றுகளை வாங்கி நடவு செய்து பலன் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் உற்பத்தி குறைவுக்கு காரணம்
தமிழ்நாட்டை பொறுத்தவரை கொய்யாவினுடைய உற்பத்தி திறன் மிகக் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் கொய்யா உற்பத்தி திறனில் சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 10 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டருக்கு 6 அல்லது 7 டன் வரை மட்டுமே கிடைக்கிறது. ஒப்பீட்டளவில் இந்தியா அளவில் பார்க்கும்போது அதில் பாதிதான் உற்பத்தி கிடைக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் நமது விவசாயிகள் சரியான கொய்யா ரகங்களை தேர்வு செய்து நடவு செய்வது கிடையாது. அதோடு மட்டுமல்லாமல் கொய்யா செடியில் கவாத்து முறைகளை கையாள்வது கிடையாது. எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயிகள் சரியான இடைவெளியில் கொய்யா நடவு செய்வது கிடையாது. இவைதான் தமிழ்நாட்டை பொறுத்தவரை மகசூல் இழப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.
கொய்யாவில் புதிய தொழில்நுட்பம்
இந்த மகசூல் இழப்பை சரி செய்வதற்கு சமீப காலங்களில் மிகவும் பிரபலமாக அறியப்படும் அடர் நடவு முறையில் கொய்யா கன்றுகளை நடவு செய்ய வேண்டும். அடர் நடவு முறையில் கொய்யாவை பொறுத்தவரை 5 மீட்டருக்கு 5 மீட்டர் என்ற இடைவெளியில் ஒரு கன்றுக்கும் மற்றொரு கன்றுக்கும் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
இவ்வாறு 5 க்கு 5 மீட்டர் என்ற இடைவெளியில் அடர் நடவு செய்யும் போது செடியினுடைய வளர்ச்சி மிக அதிகப்படியாகவும், இதன் மகசூல் அதிகரிக்கவும் வழிவகுக்கம். இந்த முறையில் ஒரு ஹெக்டருக்கு 20 முதல் 25 டன் வரை மகசூல் பெற முடிகிறது.
கவாத்து செய்யும் முறை
அடர் நடவு முறையில் முக்கியமாக கவனிக்க வேண்டியது கவாத்து செய்தல் மிக முக்கியமான ஒன்றாகும். நடவு செய்த ஆரம்ப கால கட்டத்திலிருந்தே சரியான முறையில் கவாத்து செய்வது மிக முக்கியமாகும். இன்னும் மற்றொரு முறை 3 க்கு 3 மீட்டர் இடைவெளியில் அடர் நடவு செய்யும் முறையாகும். இவ்வகையான அடர் நடவு முறையில் முதல் மூன்று மாதங்கள் கழித்து தரையிலிருந்து 60 முதல் 70 செ.மீட்டர் விட்டு கவாத்து செய்து விட வேண்டும்.
இவ்வாறு கவாத்து செய்வதன் மூலம் வெட்டுப்பட்ட பகுதிக்கு கீழுள்ள கணுவிலிருந்து நிறைய பக்க கிளைகள் உருவாகும். இவ்வாறு உருவாகக் கூடிய கிளைகளை எல்லாவற்றையும் வளர அனுமதிக்கக் கூடாது. முறையாக நான்கு திசைகளிலும் செல்லுமாறு நான்கு கிளைகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற கிளைகளை அகற்றி விட வேண்டும்.
வளர அனுமதிக்கப்பட்ட கிளைகள் அடுத்த நான்கு மாதம் வரையில் எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் வளர அனுமதிக்க வேண்டும். இதனால் அடுத்து மேலும் 60 முதல் 70 செ.மீட்டருக்கு வளர்ந்துவிடும். அடுத்து அதில் பாதி அளவிற்கு விட்டுவிட்டு கவாத்து செய்ய வேண்டும். அடுத்து 4 மாதங்கள் எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் வளர அனுமதிக்க வேண்டும். இதனால் இங்கிருந்து நிறைய பக்க கிளைகள் வளர்ந்திருக்கும். இதனால் உருவாகும் இரண்டாம் நிலை கிளைகள் அடுத்த நான்கு மாதங்களில் நன்கு வளர்ந்திருக்கும்.
இந்த இரண்டாம் நிலைக் கிளைகளை பாதி அளவிற்கு விட்டு கவாத்து செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை கவாத்து செய்வதன் மூலம் இரண்டு வருடங்களில் மரமானது நிறைய பக்க கிளைகளுடன் விரிந்த குடை போன்ற அமைப்பில் மரமானது காட்சியளிக்கும். இந்த மாதிரி விரிந்த அளவில் செடியானது காணப்படும்போது செடிக்கு அதிக அளவு சூரிய ஒளியானது கிடைக்கும்.
அதிக அளவில் சூரிய ஒளி கிடைக்கும்போது நிறைய பக்கக் கிளைகள் உருவாகிறது. நிறைய பூக்கள் பூப்பதற்கு வழிவகுக்கிறது. அடர் நடவு முறையில் நாம் எந்த அளவிற்கு கவாத்து செய்கின்றோமோ அதை பொறுத்து மரத்தில் புதிய கிளைகள் உருவாகும். மேலும் புதிய துளிர்கள் உருவாகும். இந்த புதிய துளிர்களிலிருந்து நிறைய பூக்கள் உருவாகும். இந்த பூக்களிலிருந்து காய்கள் உருவாகும். அதிக மகசூல் கிடைக்கும். மேலும் அதன் தரத்தையும் அதிகப்படுத்த முடியும்.
உரங்கள் மேலாண்மை
எந்த ஒரு பயிரின் வளர்ச்சிக்கும் உர மேலாண்மை அவசியம். உர மேலாண்மை என்று குறிப்பிடும்போது அதில் இரண்டு வகை உண்டு. ஒன்று பேரூட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகும்.
பேரூட்டச்சத்துக்கள்
பேரூட்டச்சத்துக்களை பொறுத்தவரையில் யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் சத்துக்கள் ஆகும். இதனை வருடத்திற்கு இரண்டு முறை கொடுக்க வேண்டும். ஒரு வருடத்தில் மார்ச் மற்றும் அக்டோபர் மாதத்தில் கொடுக்க வேண்டும்.
இதில் 1 கிலோ யூரியா, 3 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 750 கிராம் பொட்டாஷ் ஆகியவற்றை கலந்து மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் கொடுக்க வேண்டும். இந்த பேரூட்டச்சத்துக்கள் கொடுக்கும்போது புதிய தளிர்கள் உருவாவதற்கம், கவாத்து செய்யும்போது அதிக கிளைகள் ஏற்படுவதற்கும் உதவும்.
நுண்ணூட்டச்சத்துக்கள்
நுண்ணூட்டச்சத்துக்கள் செடிக்கு மிகக் குறைந்த அளவே தேவைப்படும். ஆனாலும் இந்த நுண்ணூட்டச்சத்துக்கள் செடிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த நுண்ணூட்டச்சத்துக்கள் வழங்காமல் பேரூட்டச்சத்துக்களை எவ்வளவுதான் கொடுத்தாலும் அது பெரிய அளவிற்கு பலன் தராது. இந்த நுண்ணூட்டச்சத்துக்களின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளை தாவரத்தில் நம்மால் நன்கு பார்க்க முடியும்.
நுண்ணூட்டச்சத்துக்களின் குறைபாட்டால் இழைகள் பச்சை தன்மையை இழந்து வெளிர் நிறத்திற்கு மாறிவிடும். பூக்கள் அதிகமாக உதிர்தல் ஏற்படும். காய்பிடிப்பு குறைந்து விடும். அப்படியே காய்பிடிப்பு ஏற்பட்டாலும் அதன் வளர்ச்சி குறைவாக இருக்கும். இந்த நுண்ணூட்டச்சத்துக்களைப் பொறுத்தவரையில் தாமிரம், துத்தநாகம், பெர்ரஸ் மிக மிக முக்கியமானதாகும்.
கொய்யாவை பொறுத்தவரையில் துத்தநாக சல்வேட் 0.5 சதவிகிதம், மாங்கனீஷ் சல்பேட் 0.5 மெக்னீசியம் சல்பேட் 0.5 சதவிகிதம், பெரஸ் சல்பேட் 0.5 சதவிகிதம் கலந்த கலவை நான்கு தடவை கொடுக்க வேண்டும். இந்த கலவையை புதிதாக துளிர் வந்தவுடன் ஒரு முறை கொடுக்க வேண்டும். அடுத்ததாக பூக்கள் பூக்கும்போது ஒரு முறையும், பூக்கள் பூத்து முடித்த ஒரு மாதம் கழித்து ஒரு முறையும், கடைசியாக காய்பிடிக்கும்போது ஒரு முறை இந்த கலவையைக் கொடுக்க வேண்டும்.
பூச்சிகள் மேலாண்மையை
பூச்சிகள் மேலாண்மையை பொறுத்தவரையில் மாவுப்பூச்சிகள் மற்றும் பூஞ்சானங்கள் பிரச்சனை இருக்கும். இதனை தவிர்க்க மிக எளிதாக துணி துவைக்க பயன்படுத்தும் சோப்புக் கரைசலை தண்ணீர் சரியான அளிவல் கலந்து தெளிப்பான் மூலம் தெளித்துக் கட்டுப்படுத்த முடியும்.
தேவையான அளவு பேரூட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை தேவையான நேரத்தில் செடிகளுக்கு கொடுத்து அதே சமயத்தில் தொடர்ச்சியாக கவாத்து செய்யும் நடைமுறையையும் முறையாக பின்பற்றி வந்தாலே கொய்யாவில் சரியான விளைச்சலை பெற முடியும். நல்ல திரட்சியான பூக்களும், நல்ல தரமான சுவையான காய்களும் கிடைக்கும். எனவே மேற்கண்ட முறையாகளை கையாண்டு விவசாய பெருமக்கள் கொய்யா சாகுபடியை சிறப்பாக செய்து அதிக மகசூலை எடுக்க முடியும்.
உங்கள் பார்வைக்கு:
மாவில் அடர் நடவு முறை தொழில்நுட்பம்
Post Comment