×

சந்தன மரங்கள் சாகுபடியில் கவனிக்க வேண்டியவை

சந்தன மரங்கள் சாகுபடி

சந்தன மரங்கள் சாகுபடியில் கவனிக்க வேண்டியவை

Spread the love

தமிழ்நாட்டில் 1950 களில் சந்தன மரத்தின் உற்பத்தி மற்றும் பயன்பாடு 4000 மெட்ரிக் டன்களாக இருந்தது. இது பல்வேறு காரணங்களால் படிப்படியாக குறைந்து தற்போதைய நிலவரப்படி 1000 மெட்ரிக் டன்னுக்கும் குறைவாக உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழ்நாடு வனச்சரக சட்டத்திருத்தம் 2002 இல் மேற்கொண்ட பிறகு வேளான்மை நிலங்களில் சந்தன மரங்களை வளர்ப்பதற்கு அரசு அனுமதி அளித்தது. அதேபோல 2008 ஆம் ஆண்டு அரசு தனிநபர்களும் தங்களுடைய பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்க்க தனிநபர்களுக்கும் அனுமதி அளித்தது. அதன்படி தனிநபர்கள் தங்கள் நிலங்களில் சந்தன மரங்களை வளர்க்கலாம். மரங்கள் வளர்ந்த பிறகு அரசு அதனை கொள்முதல் செய்துகொள்ளும்.

தற்போது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பல்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்களிலும், தனிநபர் வைத்துள்ள பகுதிகளிலும் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

சந்தன மரங்கள் ஏற்ற மண் வகை

சந்தன மரங்கள் பசுமை மாறா மரங்கள் வகையைச் சேர்ந்தது. சந்தன மரங்கள் வளர்வதற்கு ஏற்ற மண் செம்மண், சரளை மண், செம்புரை மற்றும் வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றதாக உள்ளது. இதற்குண்டான மழை அளவு என்பது குறைந்தபட்சம் 500 மில்லி மீட்டர் முதல் அதிகபட்சமாக 2000 மில்லி மீட்டர் வரை தேவைப்படுகிறது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 40 டிகிரியும், குறைந்தபட்சம் 15 டிகிரியும் சந்தன மரங்கள் வளர்வதற்கு உகந்த வெப்பநிலையாக உள்ளது.

நாற்றுகள் தேர்வு செய்யும் முறை

மரங்கன்றுகளைப் பொறுத்தவரையில் தரமான மரக்கன்றுகள் மிகவும் முக்கியமானது. அதற்கு தரமான தாய் மரங்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த தாய் மரமங்கள் மத்திய வயதுடையதாகவும், வீரிய வளர்ச்சியுடையதாகவும் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் மரங்களிலிருந்து விதைகளை சேகரிக்கப்பட வேண்டும்.

விதை நேர்த்தி செய்தல்

விதை விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்வது அவசியம். அதற்கு ஜிப்ரலிக் அமிலம் 500 PPM என்ற வகையில் கலந்து அதனை ஊற வைத்து அடுத்த நாள் பாத்தியில் விதைக்கலாம். நாற்றாங்கள் பாத்தி தயார் செய்வதற்கு செம்மண், மணல் மற்றும் மக்கிய தொழு உரம் 3:1:1 என்ற அடிப்படையில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு ஏற்பாடு செய்து விதைகளை மேட்டுப்பாத்தியில் விதைக்க வேண்டும். இவ்வாறு விதைக்கும் போது மூன்று அல்லது நான்கு வாரங்களில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும்.

நாற்றுகள் நான்கு அல்லது ஐந்து இலைகள் வந்த நிலையில் அதனை மற்றொரு பாலீத்தின் பைகளில் மறுநடவு செய்ய வேண்டும். இவ்வாறு நடவு செய்யும்போது கூடவே பொன்னாங்கன்னி கீரையை சேர்த்து நடவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பொன்னாங்கன்னி கீரையின் வேரானது சந்தன மரத்தின் நாற்றுகளின் வேர்களுடன் இணைந்து தேவையான ஊட்டச்சத்தினை வழங்கி அதன் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

நிலத்தை தயார் செய்தல்

நிலத்தை தயார் செய்யும்போது டிராக்டர்கள் கொண்டு குறுக்கு உழவு முறையில் இரண்டு முறையில் மண்ணை கிளறி உழ வேண்டும். அடுத்து மண்ணை சமபடுத்தி நிலத்தை தயார் செய்ய வேண்டும்.

சந்தன மரத்திற்கான இடைவெளி என்று பார்க்கும்போது ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடையே 4 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 250 நாற்றுகள் தேவைப்படுகிறது. சந்தன மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு குழிகள் எடுக்க வேண்டும். இந்த குழிகள் நீளம், அகலம் மற்றும் ஆழம் ஆகியவை 45 சென்டி மீட்டர் இருக்கும் அளவுக்கு குழிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நடவு செய்யும் முன் உரமிடுதல்

இவ்வாறு நடவு செய்யும்போது அடியுரம் இட வேண்டும். அதற்கு மக்கிய தொழு உரம் 5 கிலோவும், வேப்பம்புண்ணாக்கு 250 கிராம் கலந்து அதனுடன் 250 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவை நன்றாக கலந்து அடிஉரம் வைக்க வேண்டும். இவ்வாறு அடி உரம் வைத்தபின் சந்தன மர நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

துணைப்பயிர்களை நடவு செய்தல்

நடவு செய்தபின் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் நாற்றாங்கால் நிலையில் முதலில் பொன்னாங்கன்னி கீரையை பயன்படுத்துவதுபோல மரத்திற்கு இடையில் அகத்திக்கீரையை நடவு செய்தல் வேண்டும். மேலும் சந்தன மரத்தின் துணையாக நிரந்தமாக சவுக்கு மரக்கன்றுகளை ஒரு அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். அகத்தி மரக்கன்றுகள் மற்றும் சவுக்கு மரக்கன்றுகளின் வேர்கள் ஆழமாக வளரக்கூடியவை. இவ்வாறு வளர்வதால் சந்தன மரவேர்களுக்கும், அகத்தியின் வேர்களுக்கும் வேர் ஒட்டு ஏற்படும். இதனால் என்ன பயன் என்றால் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கி அகத்தியிலிருந்து சந்தன மரத்திற்கு பரிமாறப்படும்.

அகத்தியின் வளர்ச்சி சுமார் ஒரு வருடங்கள் இருக்கும். இந்த நேரங்களில் அகத்தியின் வேர் ஒட்டு போதுமான ஊட்டச்சத்தினை வழங்கும். ஓர் ஆண்டிற்குப்பிறகு அகத்தி காய்ந்துபோக ஆரம்பிக்கும். அதற்குள் சந்தன மரத்தின் ஒரு அடியில் நடவு செய்த சவுக்கு மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்து சந்தன மரத்தினுடன் வேர் ஒட்டு ஏற்பட்டு நிரந்தரமாகும். இதனால் சந்தன மரத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

அகத்திக்கீரை மற்றும் சவுக்கு மரங்கள் வெளிப்புறத்தில் உள்ள தழைச்சத்தினை கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் வேர்கள் மூலமாக சந்தன மரங்களுக்கு தழைச்சத்தினை இந்த இரண்டு மரங்களும் வழங்குகின்றன. இதனால் அகத்தி மற்றும் சவுக்கு மரங்களிலும் கூடுதல் வருவாயை அறுவடைக்கு இடையில் பெற முடியும்.

சந்தன மரங்கள் வளர்ப்பில் உள்ள நடைமுறைகள்

சந்தன மரங்களை விவசாயிகள் மற்றும் தனிநபர் வளர்ப்பதில் உள்ள நடைமுறையை தெரிந்துகொள்ள வேண்டும். தமிழக அரசின் வருவாய் பதிவேட்டில் சந்தன மரக்கன்றுகள் நடுவதற்கு முன்பாக சந்தன மரக்கன்றுகள் நடப்படும் இடம், மரக்கன்றுகளின் எண்ணிக்கை, உரிமையாளர் பெயர், நடப்படும் வருடம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அரசிடம் ஆவனப்படுத்த வேண்டும்.

சந்தன மரத்தினுடைய அறுவடைக்காலம் என்பது 20 முதல் 30 ஆண்டுகள் ஆகும். சந்தன மரத்தினை அறுவடை செய்வதற்கு முன்பாக மாவட்ட வனத்துறையில் அனுமதி பெற வேண்டும். வனத்துறையின் சார்பாக வனத்துறை அதிகாரிகள் வந்து மரங்களுடைய எண்ணிக்கை அதனுடைய வளர்ச்சி, உயரம், சுற்றளவு உள்ளிட்டவற்றை கண்டறிந்து அறுவடைக்கு அனுமதி கொடுப்பர்.

மேலும் அறுவடை என்பது வனத்துறை அதிகாரிகள் சம்மந்தபட்ட விவசாயிகள் முன்னிலையில் அறுவடை செய்வர். அறுவடையில் வேர்ப்பகுதி, தண்டுப்பகுதி மற்றும் கிளைப்பகுதிகள் என தனித்தனியாக பிரித்து அரசு மர சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சத்தியமங்களம், திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய மூன்று இடங்களில் இந்த சேமிப்பு இடங்கள் உள்ளன.

இங்கு மரங்களை சுத்தம் செய்து தரம் பிரித்து ஏலம் விடப்படும். இதில் 20 ஏல நடைமுறை போக மீதமுள்ள 80 சதவிகிதம் உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு கொடுக்கப்படும். ஓட்டுமொத்த அளவில் பார்க்கும்போது மற்ற மரங்களைக் காட்டிலும் சந்தன மரம் வளர்ப்பு அதிக லாபம் தரக்கூடியது. ஆகவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து நல்ல லாபத்தை பெற முடியும்.

உங்கள் பார்வைக்கு:

மாவில் அடர் நடவு முறை தொழில்நுட்பம்


Spread the love

Post Comment

You May Have Missed