பலன் தரும் பப்பாளி சாகுபடி
பப்பாளியினுடைய வகையைப் பொறுத்து பெரிய அல்லது சிறிய மரங்களாக இருக்கிறது. பொதுவாக இந்த பப்பாளி மரங்கள் இரண்டு அல்லது நான்கு வருடங்கள் ஆகும். முக்கியமான இரண்டு வகைகள் நாட்டு ரகம் மற்றொன்று குட்டை ரகம் ஆகும். பொதுவாக பப்பாளி மற்றும் வாழை மரங்கள் குறுகிய காலத்தில் அதிக அளவு விவசாயிகளுக்கு பலன் தரக்கூடிய மர வகைகளாக இருக்கின்றன.
பப்பாளி மரங்களுடைய பூர்விகம் மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோ என அறியப்படுகின்றன. இந்த இடங்களில் தோன்றிய இந்த மரங்கள் இந்தியாவிற்கு 16 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் போர்ச்சுகீஷியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்திய காலகட்டத்தில் இந்த மரங்கள் பூர்வீக நிலத்தை விட இங்கு இந்தியாவில் நல்ல மகசூல் அளித்திருக்கிறது. எனவே இந்த பழ மரத்தை இந்தியாவில் பயிர் செய்வதற்கு ஆங்கிலேயர்கள் அதிக ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.
பப்பாளி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு
இப்பொழுது இந்த பப்பாளி பழங்கள் உற்பத்தியில் உலக அளவில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது. மேலும் இந்த மரங்களின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இவை வருடம் முழுவதும் பழங்கள் தரக்கூடியவை. எனவே இந்த மரத்தினுடைய விதைகளை எந்த காலகட்டத்திலும் நம்மால் நடவு செய்ய முடியும். நமது இந்தியாவில் நிலவும் வெப்பநிலைக்கு ஏற்ப ஒரு சிறப்பான வளர்ச்சியையும், அதிக மகசூலையும் அளிக்கக் கூடிய மரங்களில் முக்கியமான மரப்பயிராக இவை உள்ளன. அதைபோல கோடை காலம், மழை காலம், குளிர் காலம் என அனைத்து விதமான சூழ்நிலையிலும் காய் கொடுக்ககூடிய ஒரு பழ மர வகையாகும்.
பப்பாளி மரங்களின் பயன்கள்
நமது இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பகுதியில் இந்த பப்பாளி மரங்கள் செழித்து வளர்ந்து வருடம் முழுவதும் காய்த்து பலன் தருகின்றன. இந்தியா போன்ற வெப்பமண்டல பகுதியில் வாழும் மக்களுக்கு இதன் பழங்கள் ஒரு அரிய பொக்கிஷம் போன்றவை. காரணம் இதன் பழங்களில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. மேலும் வைட்டமின்- A சத்து மிக அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் கண்பார்வைக்கு மிக நல்லது. கண்பார்வைக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள் உற்பத்தியாகவதற்கு தேவையான பீட்டா கரோட்டினை பப்பாளி பழங்கள் கொண்டுள்ளன.
இந்த பப்பாளி பழங்கள் தினசரி உணவு பட்டியலில் தேவையான அளவு எடுத்துக்கொள்வது அனைத்து வயதினருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் அவசியமானது. மேலும் 80 மில்லி கிராம் அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. வைட்டமின் சி எனப்படும் சத்துக்களும் காணப்படுகின்றன. வணிக ரீதியாக விவசாயிகளுக்கு ஒரு சிறந்த மரப்பயிராக உள்ளது.
பப்பாளியில் புதிய ரகங்கள்
இதனுடைய உற்பத்தி என்று பார்க்கும்போது தமிழ்நாட்டில் இது அதிகமாக பயிரிடப்படுகிறது. குறிப்பாக 1960 ஆண்டு முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் எட்டு வகையான புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பயிரிடப்படும் மர வகைகள் அண்டை மாநிலங்களிலும் விரும்பி கேட்டு பயிரிடுகின்றனர். குறிப்பாக ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா என இப்பயிர் பயிரிடப்படுகிறது.
காரணம் இந்த வகை பப்பாளி ரகம் பப்பாளியை தாக்கும் குறிப்பிடத்தக்க வைரஸ் நோய்க்கு எதிர்ப்பு திறன் பெற்றுள்ளதால் இவை பெரிதும் விரும்பப்படும் ஒரு ரகமாக உள்ளது. பொதுவாக பப்பாளி பழங்களின் உள்பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் பயிரிடப்படும் ‘ரெட் லேடி’ எனப்படும் ரகம் மட்டும் பழங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும் அதிக சுவையுடையதாகவும் உள்ளன. கிட்டதட்ட 12 வருட ஆய்வுக்கு பின்னர் இப்படியொரு ரகத்தை நமது வேளாண் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். இது விரைவாக மகசூல் அளிக்கக்கூடிய ரகமாகவும் உள்ளது. அதிகமான காய்களைக் கொடுக்கக்கூடிய ரகமாகவும் உள்ளது.
பப்பாளியின் வணிக வாய்ப்புகள்
பொதுவாக இந்த பப்பாளி மரங்கள் பழங்களுக்காகவும் அல்லது பப்பாளி பாலுக்காவும் இவை பயிரிடப்படுகின்றன. இந்த பழ மரங்களை அடர் நடவு முறையில் நடவு செய்யும் போது 2 வருடங்களில் ஒரு ஹெக்டருக்கு 220 டன் காய்கள் கிடைக்கும். முறையான பராமரிப்பு மற்றும் உர மேலாண்மை, ஒருங்கணைந்த பூச்சி மேலாண்மை ஆகியவற்றைக் கடைபிடிக்கும்போது நல்ல ஒரு மகசூலை விவசாயிகளால் பெற முடியும். ஒரு ஹெக்டருக்கு ஒரு வருடத்தில் 8 லட்சம் வரை இலாபம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது இந்த பப்பாளி பழங்களுடைய முக்கியத்துவம் அறிந்துகொண்ட மக்கள் இதனை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். ஒரு காலத்தில் இரண்டு அல்லது மூன்று ரூபாய்க்கு விலை போன இந்த பப்பாளி பழங்கள் தற்போது நல்ல விலைக்கு விற்பனையாகின்றன. மேலும் இவற்றிலிருந்து பப்பாளி பால் எடுக்கப்பட்டு அதிலிருந்தும் நல்ல இலாபம் பெறுகிறார்கள்.
இந்த பப்பாளி பழங்களில் உள்ள ஃபைபர் காரணமாக அதாவது நார்சத்து காரணமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஏற்ற உணவாக அறியப்படுகிறது. மேலும் வயிறு தொடர்பான பிரச்சனைகளும் சரியாகின்றன என்று அறியப்பட்டுள்ளது.
பழங்களுக்காக மட்டுமல்லாமல் இதன் பாலுக்காகவும் இவை பெரிதும் பயிரிடப்படுகின்றன. இந்த பாலை ப்ராசஸ் செய்வதற்காக தனியான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இந்த பாலை பிராசஸ் செய்து பவுடர் வடிவில் மாற்றி வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இந்த பால் வெளிநாடுகளுக்கு நேரடியாகவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த வகையான தொழிற்சாலைகள் இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றன.
மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்
இந்த பப்பாளி பழங்களுடைய பாலானது இறைச்சியை மிருதுவாக்க அதிகம் பயன்படுகிறது. காரணம் இதிலுள்ள புரோட்டின் டைஜெஸ்டிவ் என்சைம் எனப்படும் ஒரு நொதி உள்ளது. இந்த என்சைம் நமது உடம்பில் வைரஸ்கள் மேலும் பல்கி பெருக ஒரு புரோட்டின் தேவை, இந்த வைரஸ் பெருக்கத்திற்கு தேவையான புரோட்டினை இந்த நொதிகள் செரிமானம் அடையச் செய்வதால் வைரஸ்காளல் நமது உடலில் பெருக முடிவதில்லை.
உங்களுக்கு நினைவிருக்கலாம் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் ஏற்படும்போது பப்பாளி மரத்தினுடைய இலையினடைய சாறை எடுத்து கொடுக்கும்போது அது உடம்பில் வைரஸ் பெருக்கத்தை கட்டுப்படுத்தியது என்று நிரூபிக்கப்பட்டது. எனவே நமது தமிழ்நாடு அரசாங்கமும், டெங்கு காய்ச்சலுக்கு இந்த பப்பாளிச் சாறை பருக சொல்லி ஆலோசனைகள் செய்தது. இதனை பழங்களாக எடுத்துக்கொள்ளும் போதும் ஓரளவிற்கு பலன் உண்டு.
பழத்திற்காகவும், பாலுக்காவும் வளர்க்கப்படும் இவ்வகை பப்பாளி ரகங்கள் அதிக வணிக நோக்கம் உடையவை. இதிலிருந்து பால் எடுத்து அதிலிருந்து ஜாம் மற்றும் ஜெல்லி போன்ற பொருள்காக மாற்றி வணிக ரீதியாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதிலிருந்து பெறப்படும் பொருள்களைக் கொண்டு இனிப்பு மிட்டாய்கள் செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
குறிப்பாக தமிழ்நாட்டில் கோயம்பத்தூர், மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி ஆகிய போன்ற மாவட்டங்களிலும் தற்போது பரவலாக பப்பாளி மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாடு மட்டுமல்லாது வட மாநிலங்களிலும் இம்மரங்கள் இதன் பலன் கருதி வளர்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் குறுகிய காலத்தில் அதாவது இரண்டு ஆண்டுகளில் பலன் தரக்கூடிய அதுவும் தொடர்ச்சியாக பலன் தரக்கூடிய ஒரு மரப்பயிர் இந்த பப்பாளி என்றால் அது மிகையில்லை.
நடவு செய்யும் முறை
ஒரு ஹெக்டர் நிலத்தில் இந்த பப்பாளி கன்றுகளை நடுவதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் எட்டு லட்சம் வரை லாபம் பார்க்க முடியும். மேலும் இதற்கான முறையான உரமிடுதல், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தல், பூச்சி மேலாண்மை செய்யும்போது நல்ல மகசூலை எடுக்க முடியும். ஒரு முறை அறுவடை செய்த பின் தொடர்ச்சியாக இதிலிருந்து பழங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது நல்ல விதைகள் தேர்வு. விதைகள் தேர்வில் குறிப்பாக நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் பெற்ற ரகங்கள், அதே சமயத்தில் அதிக மகசூல் அளிக்கக்கூடிய ரகங்களை தேர்வு செய்வதில்தான் இதன் வெற்றி அடங்கியுள்ளது.
வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட என்ற பப்பாளி வகைகள் சிறந்த தேர்வாக இருக்கும். விதையைத் தேர்வு செய்து விதைக்கும்போது அதிலிருந்து வளரக்கூடிய கன்றுகளை சுமார் 45 நாட்கள் கழித்து வயலில் சென்று நடவு செய்யலாம். இவ்வாறு நடவு செய்யும்போது ஒரு குழிக்கு ஆறு விதைகள் விதம் நடவு செய்ய வேண்டும். இந்த கன்றுகள் ஒன்றாக இரண்டரை மாதங்கள் வரை வளரும்போதுதான் அதிலிருந்து பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். அந்த பூக்களை பார்த்து அதில் பெண் மரக்கன்று ஒன்றை மட்டும் விட்டுவிட்டு மற்ற கன்றுகளை கவனமாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.
பப்பாளி மரங்களை பொருத்தவரை அவற்றில் ஆண் மரம், பெண் மரம் என இரண்டு வகை மரங்கள் உண்டு. எனவே பப்பாளி ஒரு ஒருபால் மலர்கொண்ட தாவரமாகும். ஆண் மரங்களில் ஒரு கொத்தில் தனித்தனியான நீளமான பூக்கள் இருக்கும். இதிலிருந்து இவை ஆண் மரம் என்று அறிந்துகொள்ள முடியும். அதே போல் பெண் மரத்தில் ஒவ்வொரு இலையில் கணுவிலும் ஒரு பூ விதம் பெரிய பூக்கள் இருக்கும் இதிலிருந்து பெண் மரங்களை அறிந்துகொள்ள முடியும்.
பப்பாளி மரங்களில் இனம் கண்டறிதல்
இவ்வாறு இனம் கண்டறிந்து பெண் மரம் ஒன்றை விட்டு மற்றவற்றை அகற்றி கூடவே உரம் சேர்க்க வேண்டும். மேலும் பப்பாளி மரங்கள் கன்றுகளாக உள்ள சமயத்தில் இவற்றில் நாற்று அழுகல் நோய் மட்டும் பாதிக்கும். அதிலிருந்து நாம் கவனமாக நாற்றை காப்பாற்றிக் கொண்டுவர வேண்டும். இதற்கு மேலும் ஒரு சில வைரஸ் நோய் தாக்குதலாலும் பாதிக்கப்படுவதால் தோட்டத்தைச் சுற்றி இரண்டு அடுக்காக சுற்றிலும் மக்காசசோளம் நடவு செய்து அந்த மக்காச்சோளம் ஒரு அடி அளவிற்கு வந்தபிறகு இந்த பப்பாளி மரக்கன்றுகளை நடவு செய்தால் மேற்குறப்பிட்ட வைரஸ் பாதிப்பிலிருந்து மரக்கன்றுகளைக் காப்பாற்றலாம்.
ஊட்டச்சத்து மேலாண்மை
மேலும் தாவரங்களுக்கு சில மைக்ரோ நீயுட்ரியன்ட்ஸ் அதாவது நுண்ணூட்டச் சத்துக்கள் தேவைப்படுகின்றன. இந்த நுண்ணூட்டச்சத்துக்களின் பற்றாக்குறை தாவரத்தில் வளர்ச்சியில் பாதிப்பினை ஏற்படுத்தும். காய்கள் எண்ணிக்கை குறைந்து மகசூல் பெரிய அளவில் பாதிக்கலாம். அதனால் சத்துக்களை நிறைவு செய்வதற்கு தேவையான உரங்களை நாம் அவ்வப்போது வழங்கி அதன் வளர்ச்சியை சீராக பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த நுண்ணூட்டச் சத்துக்களை நாம் உரமாகவோ, இலைகளுக்கு ஸ்பிரே மூலமாகவோ அல்லது டிரிப் இரிகேசன் நீர் மூலமாக வாரத்துக்கு ஒரு முறை வழங்கலாம். தேவையான உரங்கள், நுண்ணூட்டச்சத்துக்கள், தண்ணீர் வசதிகள், பூச்சி மேலாண்மை ஆகியவற்றின் மூலம் முறையாக பராமரிப்பு செய்யும்போது ஒரு ஹெக்டருக்கு 5 முதல் 8 லட்சம் வரை வருடத்திற்கு வருமானம் ஈட்ட முடியும். கூடுதலாக இவற்றிலிருந்து கிடைக்கும் பால் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் கூடுதல் வருமானம் எனலாம்.
பப்பாளி மரங்கள் உண்மையில் ஒரு விவசாயத் தோழன் என்று குறிப்பிடலாம். நடவு செய்த இரண்டு ஆண்டுகளில் நல்ல மகசூலை வழங்கக்கூடிய மரப்பயிர்கள் என்றால் அது மிகையில்லை. எனவே விவசாயிகள் தங்களது தோட்டங்கள் அல்லது வயல்களில் பப்பாளி மரங்களை பயிரிட்டு நல்ல வருமானத்தை பெறக்கூடிய அனைத்து சாத்தியக்கூறுகளும் இதில் உள்ளன.
உங்கள் பார்வைக்கு:
ஆமணக்கு பயிரில் பூச்சி மேலாண்மை
Post Comment