மாவில் அடர் நடவு முறை தொழில்நுட்பம்
மாமரங்கள் கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு முன்பே அறிமுகமான ஒரு மரப்பயிராகும். இந்தியாவில் விவசாயிகள் மாமரம் பயிரிடும்போது வயலில் 10 க்கு 10 என்ற அளவில் இடைவெளிவிட்டு நடவு செய்கிறார்கள். ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடையில் 10 மீட்டர் இடைவெளி விட்டு நாற்று நடப்படுகிறது. தற்போது வரையில் கூட இந்த நடைமுறையைத்தான் விவசாயிகள் பின்பற்றுகிறார்கள். இந்த முறையில் விவசாயிகள் மகசூல் எடுக்கும்போது மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மிகக் குறைவாக மகசூல் எடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் மா நடவு முறை
இந்த முறையைப் பின்பற்றி ஒரு ஏக்கருக்கு 6 முதல் 10 டன் என்ற அளவிலேயே மகசூல் எடுக்கின்றனர். ஆனால் மற்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் குறிப்பாக இஸ்ரேல் போன்ற நாடுகள் நம்மை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு மகசூல் பெற்று வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் அங்கு அடர் நடவு முறையில் மாமரங்கள் பயிரிடப்படுகின்றன.
இந்த அடர் நடவு முறை ஆரம்ப காலக்கட்டத்தில் ஆப்பிள் மற்றும் பிளம்ஸ் போன்ற குளிர்பிரதேசங்களில் வளரும் மரங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக அதிக மகசூலை எடுக்க முடியும் என்பதை அறிந்தனர். பழ மரங்களில் இதுபோன்ற அடர் நடவு முறை அறிமுகப்படுத்தி சரியான முறையில் கவாத்து செய்தல், சரியான அளவில் உரமிடுதல், தண்ணீர் மேலாண்மை செய்யும்போது சிறப்பான ஒரு அறுவடையைப் பெற முடிகிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடர் நடவு முறை அறிமுகம்
குறிப்பாக இந்தியாவில் 10 க்கு 10 என்ற அளவில் இடைவெளி விட்டு நடக்கூடிய மாமரங்களுக்கு மாற்றாக அடர் நடவு முறையானது முதன்முதலாக முக்கியமான மாமர வகைகளில் ஒன்றான அம்பரப்பாளி என்ற ரகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வகையில் 5 மீட்டருக்கு 5 மீட்டர் என்ற அளவில் நடவு செய்யப்பட்டது. இந்த அடர் நடவு முறையில் மாமரக் கன்றுகளை நடவு செய்யும்போது மகசூல் அதிகமாகிறது என்பது நிரூபனம் ஆகியது.
அடர் நடவு முறையில் உள்ள முறைகள்
அதிலும் குறிப்பாக பரிந்துரைக்கப்படும் அளவு 21/2 க்கு 21/2 என்ற அளவாகும். இவ்வாறு அடர் நடவு செய்யும்போது ஒரு ஹெக்டருக்கு 1500 மரக்கன்றுகளை நடவு செய்ய முடியும். இவ்வாறு அடர் நடவு முறையில் நடவு செய்யும்போது மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல நமது நாட்டிலும் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும். கிட்டத்தட்ட ஒரு ஹெக்டருக்கு 20 முதல் 24 டன் என்ற அளவில் மகசூல் பெற முடியும் என்பது தற்போது அறியப்பட்டுள்ளது.
கவாத்து செய்யும் முறை
இந்த அடர் நடவு முறையில் மிகவும் கவனிக்க வேண்டிய விடயம் என்று பார்த்தால் அது கவாத்து செய்வது ஆகும். மரங்கள் மிக உயரமாக வளராமல் படர்ந்து வளரும் வகையில் அவ்வவ்போது முறையாக கவாத்து செய்தல் அவசியம். ஆங்கிலத்தில் இதனை கேனப்பி மேனேஜ்மென்ட் என்று குறிப்பிடுவார்கள். அதாவது செடி நடவு செய்ததிலிருந்து முதல் 6 மாதத்திற்கு வளரும் போது ஒரு மீட்டருக்கு மேல் வளர்ச்சியை எட்டும்.
அப்போது கிட்டத்தட்ட 65 முதல் 70 சென்டி மீட்டர் அளவிற்கு விட்டு மீதமுள்ள உயரத்தை கவாத்து செய்துவிட வேண்டும். இதனால் இந்த இரண்டரை அடி உயரத்தில் மரத்திலிருந்து முதல்நிலை கிளைகள் தோன்ற ஆரம்பிக்கும். அடுத்து ஆறு மாதத்திற்குள் 6 முதல் 7 கிளைகள் தோன்றும். இப்போது செடியின் எல்லா பக்கமும் கிளைகள் வளரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் பரவலாக உள்ள கிளைகளை விட்டுவிட்டு மற்ற கிளைகளை மீண்டும் 3 முதல் 4 முறை கவாத்து செய்ய வேண்டும்.
மரத்தின் எல்லா கிளைகளையும் நாம் வளர அனுமதிக்கும்போது அதிகப்படியான இலைகள் இருக்கும். இதனால் சூரிய வெளிச்சம் மரத்திற்கு கீழே வரை கிடைப்பது சிக்கல் ஆவதால் செடியினுடைய வளர்ச்சி குறையும். மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். அதற்காக முதல் 3 முதல் 4 கிளைகள் மட்டும் விட்டுவிட்டு மற்ற கிளைகளை கவாத்து செய்துவிட வேண்டும்.
அடுத்த ஆறு மாதத்தில் முதல் நிலை கிளைகளிலிருந்து இரண்டாம் நிலை பக்க கிளைகள் உண்டாகும். இவ்வாறு உண்டாகும் இரண்டாம் நிலை கிளைகளில் வளரும் கிளைகளில் மூன்று அல்லது 4 கிளைகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற கிளைகளை கவாத்து செய்துவிட வேண்டும்.
கவாத்து செய்வதன் நன்மைகள்
இவ்வாறு கவாத்து செய்வதன் மூலம் மரமானது மிக அதிகமான பரவலை கட்டுப்படுத்திவிட முடியும். மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் மரத்திற்கு கிடையில் காற்று இடைவெளி கிடைக்கவும் மரத்தின் எல்லா பகுதிகளுக்கும் சூரிய ஒளி கிடைக்கவும் வழிவகை செய்ய முடியும்.
இதுபோல கவாத்து செய்வதன் காரணமாக செடியினுடைய வளர்ச்சி ஒரே சீராக இருக்கும். ஒவ்வொரு வருடமும் காய்ப்பு திறனும் ஒரே சீராக மகசூல் குறையாமல் கிடைக்கும். இதுபோல் அடர் நடவு முறையில் நம்மால் எளிதாக சொட்டு நீர் பாசனம் அமைக்க முடியும். மேலும் மல்ச்சிங் சீட் எனப்படும் நிலப்போர்வையை அமைக்கும் போது மரங்களுக்கு இடையில் முளைக்கும் தேவையற்ற களைச்செடிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
சொட்டு நீர் பாசனத்தின் வாயிலாக மரத்திற்கு தேவையான அனைத்து உரங்களையும் கொடுப்பதன் மூலம் செடியினுடைய வளர்ச்சி சீராக இருக்கும். பொதுவாக மாமரத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் காய்ப்பு வரும். நல்ல மகசூலும் கிடைக்கும். ஒரு காய்ப்புக்கு பிறகு கவாத்து செய்துவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் அடர் நடவு முறைகள்
தமிழ்நாட்டை பொறுத்தவரை பல்வேறு அடர் நடவு முறையை கடைபிடித்து வருகின்றனர். பொதுவாக 10 க்கு 10 மீட்டர் நடவு முறை, மற்றொன்று அருங்கோன நடவு முறையிலும் நடவு செய்யப்படுகிறது. இவ்வாறான நடவு முறையில் ஒரு ஹெக்டருக்கு 250 செடிகள் நடவு செய்யப்படுகிறது. இந்த நடவு முறையில் 10 முதல் 15 டன் அளவிற்கு மகசூல் கிடைக்கிறது.
மற்றொரு முறை 5 க்கு 5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யும்போது ஒரு ஹெக்டருக்கு 400 மரங்கள் நடவு செய்யப்படுகிறது. அதில் நமக்கு கிடைக்கூடிய மகசூல் 15 முதல் 20 டன் அளவு மகசூல் கிடைக்கிறது.
இன்னொரு அடர் நடவு முறை 3 க்கு 2 மீட்டர் என்ற அளவில் நடவு செய்தல். இம்முறையில் ஒரு ஹெக்டருக்கு 1666 மரக்கன்றுகளை நடவு செய்ய முடியும். இதன்மூலம் ஒரு ஹெக்டருக்கு 25 முதல் 30 டன் வரை மகசூல் பெற முடியும்.
கவாத்து செய்யும் முறையை சரியாக கடைபிடித்து, சரியான நீர் மேலாண்மை, உரமிடுதல் போன்றவற்றை செய்வதும், தமிழ்நாட்டின் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ற ரகங்களை தேர்வு செய்வதும் இந்த அடர் நடவு முறையில் தேர்வு செய்வதும் விவசாயிகள் வெற்றிகரமான மகசூலை பெறுவதற்கு உதவும்.
கவாத்து செய்வதன் மற்றொரு நன்மை என்னவெனில் நோய் தாக்குதல் மற்றும் பூச்சித் தாக்குதல் குறையும். அது மட்டுமல்லாமல் மண் பரிசோதனை செய்து மரங்களுக்கு சீரான நீர் மேலாண்மை செய்ய முடியும். மேலும் கவாத்து செய்வதன் மூலம் மரங்கள் உயரமாக வளர விடாமல் குட்டையாக பராமரிப்பதால் காய்கள் அறுவடை செய்வது எளிது. பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்துவது எளிது.
மேற்காணும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வளர்ச்சியடைந்த நாடுகளில் அறுவடை செய்யப்படும் ஒரு ஹெக்டருக்கு 25 முதல் 30 டன் மகசூலை இந்தியாவிலும் அறுவடை செய்ய முடியும். விவசாயிகளுக்க இந்த முறை நல்ல பலனையும், வருமானத்தையும் தரும்.
உங்கள் பார்வைக்கு:
மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை
Post Comment