×

வெண்டைக்காய் சாகுபடியில் தொழில் நுட்பங்கள்

வெண்டைக்காய் சாகுபடி

வெண்டைக்காய் சாகுபடியில் தொழில் நுட்பங்கள்

Spread the love

தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வெண்டை காய்கறிப் பயிர் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டின் உணவு பட்டியலில் உள்ள காய்கறிகளில் முக்கிய பயிராக வெண்டை உள்ளது. காரணம் வெண்டைச் செடி ஒரு குறுகிய காலப் பயிராகும். முதல் அறுவடைக்கு வந்த பின்னர் தொடர்ச்சியாக இதிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்கு வெண்டைக்காயை எடுத்துக்கொண்டே இருக்கலாம்.

குறிப்பாக வெண்டைச் செடியை நடவு செய்த 45 முதல் 50 நாட்களுக்குள்ளாக வருமானம் தரக்கூடிய ஒரு குறுகிய கால பயிராகும். வெண்டைச் செடியில் நிறைய நோய்த்தாக்குதல் மற்றும் பூச்சித்தாக்குதல் பிரச்சனைகள் உண்டு. அதே சமயத்தில் நீர்த் தேங்கம்போது வேர் அழுகல் நோய் பிரச்சனைகளும் உண்டு. எனவே இதனை முறையாக மேலாண்மை செய்து நல்ல விளைச்சலைப் பெற முடியும்.

மண்ணை தயார் செய்தல்

வெண்டைச் செடி சாகுபடியில் முதலில் மண்ணை நல்ல முறையில் பதப்படுத்துவது மிகவும் அவசியம். மண்ணை உழுது தயார் செய்வதற்கு முன்னதாக இயற்கை உரங்களான ஆடு, மாடு கழிவுகளை நன்கு மக்க வைத்து நிலத்தில் பரப்பி பின் புழுதி பறக்க இயந்திரங்களைக் கொண்டு உழவு செய்ய வேண்டும். வெண்டைச் செடிகளுக்கு சமமான நிலத்தை விட பாத்தி அமைத்து விதை நடவு செய்யும்போது அதன் விளைச்சல் அதிகமாக கிடைப்பதாக அறியப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தில் விதைக்கும்போது பாத்தி அமைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மழைக்காலங்களில் அவசியமாக பாத்தி அமைக்க வேண்டும். அடுத்ததாக விதைகள் தேர்வு செய்வது அவசியம். காரணம் நல்ல குறுகிய காலத்தில் நோய்களுக்கு எதிர்ப்புத் திறன் பெற்ற ரகங்களாக வளர்ப்பது அவசியம். மேலும் விதை விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்வதும் அவசியம் ஆகும்.

விதை தேர்வு மற்றும் விதை நேர்த்தி செய்தல்

வெண்டைக்காய் சாகுபடி

பாத்தி அமைத்தவுடன் சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தி விதைகளை ஊன்றலாம். முக்கியமாக பயன்படுத்தும் ரகம் நல்ல தரமான விதையாக தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக தமிழக வேளாண் ஆராய்ச்சி மையம் பரிந்துரைக்கும் தரமான ரகங்களை ஆலோசனையின் பேரில் வாங்கி விதை விதைக்கலாம். அதற்கு முன் விதை நேர்த்தி என்பதை மறந்துவிடக்கூடாது.

அதிகபட்சமாக ஒரு ஏக்கர் நிலத்திற்கு முக்கால் கிலோ விதைகள் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் இரண்டு விதைகள் விதம் விதைப்பு செய்ய வேண்டும். செடிகள் ஓரளவு வளர்ந்தபிறகு இரண்டு செடிகளில் எந்த செடியில் முளைப்புத் திறனும் வளர்ச்சியும் இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு மற்றொன்றை நீக்கி விட வேண்டும். இந்த விதைகள் வாங்குவதற்கும் அரசாங்கம் மானியம் வழங்குகிறது.

பூச்சி மேலாண்மை

செடி முளைக்க ஆரம்பித்தவுடன் ஆரம்பத்தில் இழைப்புழுக்கள் வந்து தாக்கும். இதற்கு முறையான மருந்து தெளித்து அதனைக் கட்டுப்படுத்திவிட வேண்டும். அடுத்து 15 நாள் அல்லது 20 நாள்களில் பூக்க ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் செடி பூக்க ஆரம்பித்தவுடன் சில வண்டுகள் பாதிப்பும் இருக்கும். அதனையும் சரியான மருந்து தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.

குறிப்பாக வெண்டையில் மாவுப் பூச்சித் தாக்குதல் மிக அதிகமாக இருக்கம். இதனை தவிர்க்க இயற்கை முறையில் வேம்பு கரைசலை பயன்படுத்தலாம். அல்லது இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசலைப் பயன்படுத்தி வெகுவாகக் கட்டுப்படுத்தலாம்.

உரங்கள் மேலாண்மை

வெண்டைக்காய் சாகுபடி

நல்ல தழைச்சத்து மற்றும் மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் அடங்கிய உரங்களை முறையான இடைவெளிகளில் கொடுத்துவர வேண்டும். அல்லது டிரிப் இரிகேசன் அல்லது சொட்டு நீர் பாசனத்தின் வழியாகவும் இந்த உரத் தேவையை பூர்த்தி செய்யலாம். இந்த உரங்களை எடுத்துக்கொண்டு வெண்டை செடி நன்கு வளர 25 முதல் 30 நாள்கள் ஆகும். பூக்கும் நேரங்களில் அதிக அளவு பூச்சித் தாக்குதல் இருக்கம். அதவாது அசுவினிப் பூச்சிகள், காய்ப்புழுக்கள் போன்ற பாதிப்புகள் இருக்கும். இதனை கட்டுப்படுத்தி மேலாண்மை செய்யும் போது முதல் 40 நாட்களில் முதல் முறையாக காய் ஒடிக்கலாம் அல்லது அறுவடை செய்யலாம். இதில் நல்ல மகசூல் பெற முடியும்.

ஆரம்பத்தில் காய்கள் பறிக்கும்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்களை பறிக்கலாம். பின் தினமும் காய் பறிக்கிற அளவு செடிகள் நன்கு வளர்ந்து விளைச்சல் தர ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ முதல் 300 கிலோ காய்கள் கிடைக்கும். பின் அறுவடை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இருப்பினும் முதல் காய் பறித்ததிலிருந்து 60 நாட்கள் வரை தொடர்ச்சியாக அறுவடை செய்யலாம். நல்ல மகசூல் கிடைக்கும்.

இந்த காலக்கட்டங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் உரங்கள் கொடுத்து விளைச்சல் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். கலப்பு உரங்கள் அல்லது அனைத்துச் சத்துக்களும் அடங்கிய இயற்கை உரங்களை தவறாமல் வழங்க வேண்டும். இடைப்பட்ட காலங்களில் ஏதேனும் நோய்த் தாக்குதல் அல்லது பூச்சித் தாக்குதல் இருப்பது கண்டறிந்தால் அதனை சரிசெய்வதற்கு வேண்டிய மருந்துகளை தெளிக்க வேண்டும்.

பயிர் சுழற்சி முறையை செயல்படுத்துதல்

விளைச்சல் முடிந்தவுடன் உடனடியாக மறுமடியும் வெண்டை சாகுபடியை ஆரம்பிக்க கூடாது. மாறாக பயிர் சுழற்சி முறையில் மாற்று பயிரை பயிர் செய்ய வேண்டும். ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் இடையில் உழுந்து, துவரை உள்ளிட்ட பருப்பு வகை தாவரங்களை பயிர் செய்யலாம். காரணம் இந்த பருப்பு வகை தாவரங்களை பயிர் செய்யும்போது இதிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகின்றன. இதனால் அடுத்ததாக பயிரிடப்படும் தாவரங்களுக்கு தேவையான உரங்கள் இயற்கையாக மண்ணில் சேர்க்கப்படுகின்றன.

கோடைக்காலமாக இருந்தால் கோடைக்கால பயிரான தர்பூசனி பழங்களை பயிர் செய்யலாம். இதுவும் ஒரு குறுகிய கால பயிராகும். மேலும் நல்ல மகசூல் தரக்கூடிய ஒரு பயிராகும். கோடைக்காலத்தில் தர்பூசணிப் பழங்கள் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. அதிக நீர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு பழங்களாக இருப்பதால் கோடை காலத்திற்க ஏற்றது.

மேலும் நமது வயல் ஒரு ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றும்போது நமக்கு ஏற்படும் செலவு வெகுவாக குறைக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பண்ணையில் பொதுவாக ஆடுகள், மாடுகள், கோழிகள், வாத்துக்கள் உள்ளிட்டவை வளர்க்கப்படுகின்றன. இந்த வளர்ப்பு பிராணிகளின் கழிவுகளை மக்க வைத்து தாவரங்களுக்கு உரங்களாக கொடுக்கும்போது தாவரங்கள் இந்த இயற்கையான அங்ககப் பொருள்களை எடுத்துக்கொண்டு சிறப்பான வளர்ச்சியைக் கொடுக்கின்றன. மேலும் தாவரங்களிலிருந்து கிடைக்கப்பெறும் தாவரக் கழிவுகள் விலங்குகளுக்கு உணவாகவும் பயன்படுத்துவதால் ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது ஒரு இலாபகரமான விவசாய முறையாகும்.

உங்கள் பார்வைக்கு:

கோடை பருவத்திற்கேற்ற உளுந்து ரகங்கள்


Spread the love

Post Comment

You May Have Missed