×

காய்கறி பயிர்களைத் தாக்கும் செம்பேன் சிலந்திகள்

செம்பேன் சிலந்திகள்

காய்கறி பயிர்களைத் தாக்கும் செம்பேன் சிலந்திகள்

Spread the love

செம்பேன் சிலந்திகள் காய்கறி பயிர்களை சேதப்படுத்தி அதிக அளவில் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தும் பூச்சியினங்களில் ஒன்றாகும். இந்த வகை சிலந்திகள் கத்திரியில் 30 சதவிகிதம் வரையிலும், தக்காளியில் 50 சதவிகிதம் வரையிலும் மிளகாயில் 40 முதல் 50 சதவிகிதம் வரையிலும் வெண்டையில் 25 சதவிகிதம் வரையிலும் மகசூல் இழப்பை ஏற்படுத்துகின்றன.

தாக்குதலுக்கான தகுந்த காலநிலை

இந்த வகையான சிலந்திகளின் தாக்குதல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் போதும், குறைந்த அளவு ஈரப்பதம் நிலவும் போதும் அதிகளவு வயல்களில் காணப்படுகின்றன. இவ்வகையான சிலந்திகளை கட்டுப்படுத்த அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளும் அல்லது சிலந்தி கொல்லி மருந்துகளும் பயன்படுத்தும்போது அவை பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை பெற்றுக்கொண்டு இதனுடைய இனப்பெருக்கம் அதிகமாக காரணமாகி விடக்கூடும்.

வாழ்க்கை சுழற்சி பருவங்கள்

இந்த செம்பேன் சிலந்திகள் வாழ்க்கைச் சூழற்சியில் மூன்று பருவங்கள் உள்ளன. அவை முட்டை பருவம், இளநிலைப் பருவம் மற்றும் வளர்ந்த பருவம் ஆகும். இதன் முட்டைப் பருவம் வெளிர்மஞ்சள் நிறத்திலும் கோள வடிவிலும் காணப்படும். இளநிலை மற்றும் வளர்ந்த நிலையில் உள்ள சிலந்திகள் வெளிர் சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றன. இந்த வகை சிலந்திகளில் பெரும்பாலான பெண் சிலந்திகள் இனச்சேர்க்கையின்றி கருவுறாமல் இளம் உயிரிகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

இந்த சிலதைகளின் வாழ்க்கை சூழற்சி மிகவும் சிறியது. அதனால் குறைந்த கால இடைவெளியில் அதிக அளவு இனப்பெருக்கம் செய்கின்றன. முட்டை பருவம் மூன்று நாட்கள் வரையிலும், இளம் நிலை பருவம் 35 நாட்கள் வரையிலும், இதன் வளர்ந்த செம்பேன் சிலந்திகள் பத்து நாட்கள் வரையிலும் உயிருடன் வாழ்கின்றன.

ஒரு வளர்ந்த பெண் சிலந்தி 50 முதல் 100 முட்டைகள் இடுகின்றன. அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் உள்ள சமயங்களில் இதனுடைய இனப்பெருக்கம் பலமடங்கு அதிகமாக காணப்படும். இதன் மிகக் குறைந்த வாழ்க்கை சுழற்சியால் இவை விரைவாக முதிர்ச்சியடைந்து தங்கள் எண்ணிக்கையை பல மடங்கு பெருக்கிக் கொள்கின்றன.

செம்பேன் சிலந்திகளால் ஏற்படும் பாதிப்புகள்

இதனுடைய பாதிப்பு என்று குறிப்பிடும்போது கத்தரி, வெண்டை பயிர்களில் முக்கியமாக தக்காளி போன்ற பயிர்களில் இவை இலையினுடைய அடிப்பகுதியில் இருந்து கொண்டு இலை மற்றும் தண்டுப்பகுதியில் உள்ள சாற்றை உறிஞ்சுகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பால் இலையில் மேற்பரப்பில் வெந்நிற புள்ளிகள் காணப்படுகின்றன.

மேலும் இவை இலையின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு வலைகளையும் பின்னுகின்றன. இதனால் இதனுடைய இயற்கை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் பூச்சிக்கொல்லிகள் இவற்றின் இளம் உயிரிகளின் மேல் படுவதும் தவிர்க்கப்படுகிறது. இந்த வலை ஏற்படுத்தும் அமைப்பு அவற்றின் மிக முக்கியத்துவமான பாதுகாப்பினை அளிக்கிறது.

இந்த செம்பேன் சிலந்திகள் மிளகாய் போன்ற தாவரத்தை தாக்கும் போது தாக்குதலுக்கு உண்டான மிளகாயின் காம்பு பகுதி கீள்நோக்கி வளைந்தும் அதே சமயத்தில் சிறுத்தும் காணப்படும். இதனால் விவசாயிகளுக்கு 50 முதல் 60 சதவிகிதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

செம்பேன் சிலந்திகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று பார்க்கும்பொழுது இந்த சிலந்திகள் வயலில் தோன்றிய உடனே சிலந்திகள் சேதம் ஏற்படுத்திய பயிரின் பாகங்கள் மற்றும் ஒன்று இரண்டு செடிகளை கவனமாக வேறோடு அப்புறப்படுத்திவிட முடியும்.

உயிர்வழி கட்டுப்பாடு

இதனுடைய தாக்குதல் அதிகமாக உள்ள போது இயற்கையிலேயே நியூ சிலாங்கிஸ் பைனோசஸ் எனப்படும் இரை விழுங்கி சிலந்திகள் இந்த செம்பேன் சிலந்திகளின் இளம் உயிரிகளுக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. அவற்றை அனுமதிப்பதன் மூலம் இவற்றை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக இந்த வகை சிலந்திகளின் பெண் பூச்சிகள் இந்த செம்பேன் சிலந்திகளை அதிகமாக இரையாக்கிக் கொண்டு அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன.

மேலும் எண்டமோ பேட்டோதினிக் ஃபங்கஸ் எனப்படுகின்ற பூஞ்சை வகைகள் செம்பேன் சிலந்திகளுக்கு நோயை ஏற்படுத்தி செம்பேன் சிலந்திகளின் எண்ணிக்கை குறைக்க உதவுகின்றன. சிலந்திகளை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி அழிப்பதில் இந்த பூஞ்சானம் முக்கிய பங்கு வகிக்கின்றன. மெட்டாரிசம் அனிசோபிலியே மற்றும் பிவேரியா ஃபேசியானா போன்ற பூஞ்சைகளை பயன்படுத்துவதன் மூலம் செம்பேன் சிலந்திகளின் நடமாட்டத்தை கனிசமாக கட்டுப்படுத்திவிட முடியும்.

இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள்

இவற்றை அழிக்கும் இரசாயனப் பூச்சிக்கொல்லிகள் எனும்போது புரபார்கைட் எனும் மருந்தினை 1 லிட்டர் நீருக்கு இரண்டு மில்லியும் அல்லது ஃபெணபாபைன் எனும் மருந்தினை ஒரு லிட்டருக்கு இரண்டு மில்லி விதம் அல்லது ஸ்பைரோமெசிபின் எனும் மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு 0.8 மில்லி அளவிலும் அல்லது பென்ஸ்பைரோமிசிபின் என்னும் மருந்து 0.8 முதல் 1.2 மில்லி விதம் தெளித்து இந்த செம்பேன் சிலந்திகளை அழிக்கலாம்.

இதுபோன்று மேற்கூறிய வழிகளைப் பயன்படுத்தி இந்த செம்பேன் சிலந்திகளை சிறந்த முறையில் கட்டுப்படுத்தி அதிக விளைச்சல் மற்றும் அதிக லாபத்தினை தமிழக விவசாய பெருங்குடி மக்கள் பெற முடியும்.

உங்கள் பார்வைக்கு:

ஆமணக்கு பயிரில் பூச்சி மேலாண்மை


Spread the love

Post Comment

You May Have Missed