குடைமிளகாய் சாகுபடி பூச்சிகள் மேலாண்மை
இன்றைய காலகட்டத்தில் குடைமிளகாய் பயிரை விவசாயிகள் பரவலாக பயிரிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த குடைமிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் தனிப்பட்ட முறையில் மக்கள் தங்களது வீட்டுத் தோட்டங்களிலும், மாடித் தோட்டத்திலும் குடைமிளகாய் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குடைமிளகாய் பொறுத்தவரையில் இதனை நிழல் வலையில் வளர்க்கும்போது இதன் வளர்ச்சி மற்றும் விளைச்சல் சிறப்பாக உள்ளது. இன்றைய நவீன உணவு பட்டியலில் பெரும்பாலானவற்றில் குடைமிளகாய் சேர்க்கப்படுகிறது. நல்ல சந்தை வாய்ப்பு உள்ள காய்கறியாகவும் குடைமிளகாய் உள்ளது.
நிலத்தை தயார் செய்தல்
குடைமிளகாய் செடிகளை நடுவதற்கு முன்பாக நிலத்தை தயார் செய்வது மிகவும் அவசியம். நிலத்தை முதலில் தொழுஉரம் போட்டு நன்கு உழவு ஓட்டிக்கொள்ள வேண்டும். பின் நிலத்தை சமப்படுத்தி மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த உர மேலாண்மை மிகவும் அவசியம். தொடர்ச்சியான கண்காணிப்பு, தேவையான அளவு நீர் மேலாண்மை, உர மேலாண்மை மற்றும் பூச்சி மேலாண்மை ஆகியவற்றை கடைபிடிப்பது அவசியமாகும்.
பூஞ்சானக் கொல்லிகள்
நிலத்தில் உயிர் உரமாக ஒரு ஏக்கருக்கு 5 சூடோமோனாஸ், 5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றை 100 வேப்பம்புண்ணாக்குடன் கலந்து மேட்டுப்பாத்தியில் உரமாக வைக்க வேண்டும்.அதேபோன்று நாற்றுகளை நாற்றுப் பண்ணையிலிருந்து கொண்டுவரும்போது விவசாயிகள் நாற்றுகளை 5 கிராம் சூடோமோனாஸ் தண்ணீரில் கலந்து பூவாளி கொண்டு ஊற்றி நாற்றுகளை நனைக்க வேண்டும்.
அதேபோன்று அதிலுள்ள சாருண்ணும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 0.5 மில்லி இமிடோகுளோபிரிட் அல்லது 0.5 கிராம் அளவு தையோமீதாக்சாம் நீரில் கலந்து பூவாளிக் கொண்டு நாற்றுகளின் மீது தெளித்து நடவு செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு தெளித்து வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம் நாற்றாங்காலில் ஏதாவது பூச்சித்தாக்கதலோ அல்லது நோய்த் தாக்குதலோ இருந்தால் அவற்றை அந்த இடத்திலேயே தடுக்கப்படுகிறது. மாறாக நாற்றுக்களை நேரடியாக வயலில் நடவு செய்வதன் மூலம் இந்த பூச்சித்தாக்குதலுக்கு உள்ளான அல்லது நோய்த் தாக்குதலுக்கு உள்ளான செடிகளின் மூலம் நடவு செய்த வயல் முழுவதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும்.
செடிகளை நடுவதற்கு முன்பாக சூடோமோனாஸ் மற்றும் வேப்பம் புண்ணாக்கு கொடுப்பதால் மிளகாயைப் பாதிக்கும் வாடல் நோய் தடுக்கப்படுகிறது. நடவு செய்து 15 நாள் முதல் 45 நாள் வரை நடவு செய்த செடிகள் ஆங்காங்கே வாடல் நோயால் பாதிக்கப்படுவது தெரியவரும். இதனை நாம் சூடோமோனாஸ் கொண்டு ஆரம்பத்திலேயே தடுத்துவிடும்போது பெரும்பாலான செடிகள் ஆரோக்கியமாக வளர்ச்சியடையும்.
மேலும் குடை மிளகாய் செடிகளில் வேர் பகுதிக்கு மேல் தண்டு பகுதியில் அழுகல்நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை மேங்கோசெப் என்ற மருந்தினை 3 கிராம் ஒரு ஒன்றரை லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். இதனால் பூஞ்சான நோய்களால் ஏற்படும் வாடல் நோயை இதுபோன்ற மருந்துகளை கொடுத்து எளிய முறையில் தடுத்துவிட முடியும்.
அதேபோல செடிகள் வளர்ந்து காய் வைக்கும்போது அதிகமாக சாம்பல் நோயால் குடைமிளகாய் செடிகள் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இதற்கு தகுந்த பூஞ்சானக் கொல்லிகளை பயன்படுத்தவேண்டும். தேவைக்கதிகமாக பூஞ்சானக்கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
பூச்சிகளின் பாதிப்பு
பூச்சிகளைப் பொறுத்தவரையில் குடைமிளகாயில் சாருண்ணும் பூச்சிகளின் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இலைப்பேன் மற்றும் பச்சை தத்துப்பூச்சிகளின் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். பெரும்பாலும் இதுபோன்ற பூச்சிகளின் பாதிப்புகள் இருக்கும்போது இலைகள் சுருங்கிவிடும். இதனால் செடியினுடைய வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் பசுமைக்குடிலில் இச்செடிகளை வளர்க்கும்போது சரியான முறையில் தட்பவெப்ப நிலையும், ஈரத்தன்மையும் இருக்கும்போது சிலசமயங்களில் இந்த இலைப்பேன்களின் எண்ணிக்கையும், பாதிப்பும் அதிகமாக வாய்ப்புள்ளது.
மஞ்சண் வண்ண அட்டைப் பொறி
இந்த பிரச்சனையை சமாளிக்க நாம் பூச்சி மருந்துகளை தெளிப்பதற்கு முன்பாக முதலில் கவர்ச்சி பொறியான மஞ்சள் வண்ண அட்டைகளை உபயோகப்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு 12 மஞ்சள் வண்ண அட்டை பொறிகள் உபயோகப்படுத்தலாம். இந்த மஞ்சள் அட்டைகளை செடிகள் வளர்ச்சி அல்லது உயரத்திற்கு ஏற்ப ஒரு கம்பு அல்லது தடியை வைத்து மண்ணில் ஊன்றி கட்ட வேண்டும். இவ்வாறு மஞ்சள் வண்ண அட்டை பொறியை பயன்படுத்தும்போது பச்சை வண்ண தத்துப்பூச்சி பெரும்பாலும் இதில் ஒட்டிக்கொள்ளும்.
இலைப்பேன் பாதிப்பு அதிகமாக இருக்கும்போது மஞ்சள் வண்ண அட்டை பொறிக்கு பதிலாக நீலவண்ண அட்டைப் பொறியை பயன்படுத்த வேண்டும். இந்த அட்டைப் பொறியும் ஒரு ஏக்கருக்கு 12 எண்ணிக்கையில் கட்ட வேண்டும். அடுத்ததாக குடை மிளகாயை பாதிக்கக்கூடிய மற்றொரு பூச்சி செம்பேன் சிலந்தி பூச்சி ஆகும்.
இந்த செம்பேன் சிலந்திகளை கட்டுப்படுத்த வேப்பம் சோப்பு அல்லது வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தலாம். இந்த சோப்பினை 45 நாள் பயிரில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவிற்கு கலந்து மேலும் அதனுடன் ஒரு லிட்டருக்கு 0.5 மில்லி என்ற அளவிற்கு கலந்து இலைகள் நன்கு நனையும்படி அடிக்க வேண்டும். அதேபோல 45 நாள்களுக்கு மேலான செடிகள் எனில் ஒரு லிட்டருக்கு 10 கிராம் வேப்பம்சோப்பினை கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
அதேபோன்று வேப்பம்கொட்டை கரைசல் 5 சதவிகிதம் அல்லது வேப்ப எண்ணெய் 3 சதவிகிதம் இவற்றில் ஏதாவது ஒன்றை விவசாயிகள் பயன்படுத்தலாம். இவ்வாறு ஒருங்கிணைந்த முறையில் பூச்சிகள் மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை மேற்கொள்ளும்போது செடியினுடைய வளர்ச்சி மற்றும் மகசூல் சிறப்பான முறையில் இருக்கும். இதனால் விவசாயிகள் அதிக லாபத்தை குடை மிளகாய் சாகுபடியில் ஈட்ட முடியும்.
உங்கள் பார்வைக்கு:
கோவைக்காய் சாகுபடி முறை தொழில்நுட்பம்
Post Comment