கோவைக்காய் சாகுபடி முறை தொழில்நுட்பம்
தமிழ்நாட்டின் உணவு பட்டியலில் கோவைக்காய்க்கு ஒரு இடமுண்டு. கோவைக்காய் உணவுக்காக மட்டுமின்றி மருத்துவ குணம் நிறைந்தால் சில வகை நோய்களை குணப்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. பொதுவாக கோவைக்காய் செடியின் காய்கள் மட்டுமே பெரும்பாலும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. மாறாக இதன் இலைகளையும் உணவாக பயன்படுத்தலாம்.
இந்த செடியினுடைய கீரைகள் அல்லது இலைகளை உண்ணும் மனிதர்களுக்கு ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்துகிறது. மேலும் உடலில் உருவாகக்கூடிய தேவையற்ற கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. பொதுவாக வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும் தன்மை இதன் கீரைகளுக்கு உண்டு.
மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. அதே போல வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தன்மையை நீக்கும் தன்மையும், அதிகப்படியான அமிலத்தால் ஏற்படும் குடல் பகுதி புண்ணையும் குணப்படுத்தும் தன்மை கொண்டிருக்கிறது. இந்த செடியினுடைய இலைகளை சாறு எடுத்து குடிக்கும்போது இந்த பிரச்சனையை சரிசெய்ய முடியும்.
மேலும் தோல் பகுதியில் ஏற்படக்கூடிய ஒவ்வாமை அல்லது அலர்ஜி மற்றும் தோல் நோய்கள் போன்றவற்றை குணப்பத்தும் தன்மை கொண்டது என்று அறியப்பட்டுள்ளது. கோவைக்காய் கொழுப்பை கரைப்பது மட்டுமல்லாமல் வைட்டமின்-சி, கால்சியம் மேலும் சில தாது உப்புக்கள் காணப்படுகிறது.
சாகுபடி செய்யும் முறை
கோவைக்காய் சாகுபடியைப் பொறுத்தவரை நடவு முறை முக்கியமானது. நடவு செய்வதில் பொதுவாக விதைகளற்ற முறையில் இதன் தண்டுகள் மூலம் புதிய செடிகளை உருவாக்கி நடவு செய்யும் முறையே பொதுவாக பயன்படுத்தப்படும் முறையாகும். இனப்பெருக்கத் தண்டுகளைப் பொறுத்தவரையில் ஒரு பென்சில் அளவுக்கு உள்ள தண்டுகளை 15 செ.மீ அளவுக்குள்ள தண்டுகளை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு செடிகளை உருவாக்கி மேட்டுப்பாத்தியில் செடிகளை பக்கபக்கமாக நடவு செய்யலாம். ஒரு பாத்தியில் ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் இடையில் 10 செ.மீ இடைவெளியில் விட்டு வைக்கலாம்.
நாற்றுகள் தயார் செய்தல்
அல்லது நாற்றுகளை தயார் செய்வதற்கு பாலித்தீன் பைகளைக் கொண்டு நாற்றுகள் தயார் செய்யலாம். நடவு செய்வதற்கு முன் பாலித்தீன் பைகளில் நிரப்பப்படும் மண்ணை தயார் செய்ய வேண்டும். நல்ல வளமான மண் ஒரு பங்கு, ஒரு பங்கு மணல் மற்றும் ஒரு பங்கு மக்கிய தொழு உரம் என கலந்து மண்ணை உழவு ஓட்டி தயார் செய்ய வேண்டும்.
இவ்வாறு நாற்றாங்காலை தயார் செய்யும் 45 நாட்களில் தண்டுகளில் வேர்பிடித்து வளர ஆரம்பிக்கும். இந்த செடிகளை நடவு செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பாக நடவு செய்யவுள்ள வயலில் மக்கிய தொழு உரம் சேர்த்து நன்கு உழவு ஓட்டி பின் மண்ணை சமப்படுத்தி மண்ணை தயார் செய்ய வேண்டும்.
பின் தயார் செய்த நாற்றுகளை இரண்டரை மீட்டருக்கு இரண்டரை மீட்டர் என்ற அளவில் இடைவெளி விட்டு குழிகள் எடுத்து நடவு செய்ய வேண்டும். ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் இடையிலான இடைவெளி இரண்டரை மீட்டர் இருக்க வேண்டும். ஒரு வரிசைக்கும் மற்றொரு வரிசைக்கும் இடையே இதேபோல இடைவெளி இருக்குமாறு பார்த்து நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
நடவு செய்வதற்கு எடுக்கப்படும் குழிகள் இரண்டு இரண்டு அடி என்ற அளவிற்கு இருக்க வேண்டும். பின் அதில் உள்ள மேல் மண்ணுடன் மக்கிய தொழு உரம் அரை கிலோவும், வேப்பம்புண்ணாக்கு அரைக்கிலோவும் சேர்த்து கலந்து குழிகளை நிரைக்கலாம். இந்த குழிகளில் நல்ல ஆரோக்கியமான வேர் பிடித்த நாற்றுகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
கோவைக்காய் செடிகள் கொடி வகை என்பதால் அவை பற்றி ஏறுவதற்கு உதவியாக நைலான் கயிறுகளை கட்டி செங்குத்தாக தொங்க விடுவதன் மூலம் கோவைக்காய் செடிக்கு ஒரு ஆதாரம் கிடைத்து பிடித்துக்கொண்டு மிக வேகமாக வளர்ச்சி அடையும். பந்தலில் கோவை செடிகளை வளர்க்கும்போது மண்ணிலிருந்து வளரும் செடிகளிலிருந்து வளரும் பக்கக்கிளைகளை அகற்றி விட வேண்டும். பந்தலை அடைந்தவுடன் அதனை கிளைகளுடன் வளர்வதற்கு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது செடிகள் நல்ல வீரியமாக வளரும். நிறைய பக்க கிளைகள் உருவாகும். இதனால் அனைத்து கிளைகளிலும் நமக்கு காய்கள் கிடைக்கும்.
நீர் மேலாண்மை
சொட்டுநீர் பாசனத்தின் மூலம் தண்ணீர் கொடுக்கும்போது ஒரு செடிக்கு ஒரு நாளைக்கு 5 முதல் 8 லிட்டர் வரை பருவத்தை பொறுத்து தண்ணீர் கொடுக்க வேண்டும்.
உரங்கள் மேலாண்மை
ஒரு வருடத்திற்கு ஒரு ஹெக்டருக்கு 60:40:40 என்ற அளவில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். இந்த தழைச்சத்தைப் பொறுத்தவரை செடிகள் நன்கு வேர்பிடித்து வளர்வதற்கு ஏற்றதாக நிலத்தை தயார் செய்யும்போது அடி உரமாக கொடுத்துவிடலாம். மீதியுள்ள மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களை நான்கு பங்காக பிரித்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு பருவத்திற்கும் பிரித்து கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தொடர்ச்சியாக அவற்றிற்கு சத்துக்கள் கிடைத்து செழிப்பாக வளர்ந்து பலன் தரும்.
களைச்செடிகள் மேலாண்மை
களைச்செடிகளை பொறுத்தவரை அவ்வப்போது இயந்திரங்கள் மூலமாகவோ அல்லது கைகளைக் கொண்டே களைச்செடிகளை அகற்றி செடிகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவிட வேண்டும்.
அறுவடை செய்தல்
செடி நடவு செய்த மூன்று மாதங்களில் நாம் காய்களை பறிக்க ஆரம்பிக்கலாம். அதாவது இரண்டு மாதங்களில் அவை பூக்க ஆரம்பித்துவிடும். வெண்மை நிறத்தில் பூக்கள் பூக்கும். அடுத்த ஒரு மாதத்தில் காய்கள் பறிக்கும் அளவிற்கு தயார் ஆகிவிடும். பெரும்பாலும் இதனை வருடம் மூலம் நடவு செய்ய முடியும். இருப்பினும் நல்ல பருவகாலம் என்று குறிப்பிடும்போது ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் ஆகும். இதனால் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் அறுவடைக்கு செடிகள் தயார் ஆகிவிடும். காய்கள் பறிக்கும் போது காய்கள் முற்றிவிடாமல் காய்கள் ஓரளவிற்கு பிஞ்சுக் காய்களாக இருக்கும்போதே பறித்துவிட வேண்டும். அப்போதுதான் அவை உணவுக்கு உதவும்.
தரமான ரகத்தை பொறுத்தவரை கோவைக்காய் கோ-1 என்ற ரகம் சிறப்பான மகசூலை தரக்கூடியது. இந்த ரகத்தினுடைய காய்கள் மிகவும் மெலிதாக நீளமான காய்களாக இருக்கும். கோவைக்காய் மற்ற ரகங்களைப்போல கசப்புத் தன்மை இருக்காது. உணவுக்கு ஏற்ற ஒரு ரகமாகும். வெள்ளரிக்காய் போன்ற சுவையில் இருக்கும்.
மகசூல் என்று குறிப்பிடும்போது ஒரு செடியிலிருந்து வருடத்திற்கு 40 முதல் 50 கிலோ வரை மகசூல் கிடைக்கும். குளிர்காலங்களில் இதன் மகசூல் குறைய வாய்ப்புள்ளது. எனவே அந்த நேரங்களில் செடிகளை கவாத்து செய்ய வேண்டும். இவ்வாறு கவாத்து செய்வதனால் புதிய கிளைகள் உருவாக்கி நல்ல மகசூல் கிடைக்கும்.
கோவைக்காய் செடிகளைப் பொறுத்தவரை பெரிதாக நோய்களோ, பூச்சிகளோ தாக்குவதில்லை. இதனால் இதில் எந்தவொரு பூச்சிக்கொல்லிகளும் அடிக்க தேவையில்லை. பெரிய பூச்சி மேலாண்மை இன்றி அதிக மகசூல் எடுக்க முடியும்.
உங்கள் பார்வைக்கு:
வெண்டைக்காய் சாகுபடியில் தொழில் நுட்பங்கள்
Post Comment