தர்பூசணி சாகுபடி முறை தொழில்நுட்பம்
கோடைகாலத்தில் அதிக அளவு விற்பனை வாய்ப்பு உள்ள பழங்களில் ஒன்று தர்பூசனி பழம் ஆகும். தர்பூசனி பழத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவை பச்சை நிற வரிக்காய்கள் எனப்படும் இந்த வகை ஒரு காயானது 5 முதல் 8 கிலோ வரை இருக்கும். மற்றொரு வகை அடர் பச்சை நிறத்தில் காணப்படும் வகை. இது அதிகபட்சம் 5 கிலோ எடையுள்ளதாக இருக்கும்.
பச்சை நிற வரிக்காய்களை விட அடர் பச்சை நிறத்தில் காணப்படும் தர்பூசணி வகை அதிக அளவு சுவைக்காகவும், விற்பனை வாய்ப்பிற்காகவும் பயிரிடப்படுகிறது.
தர்பூசணி ரகங்கள்
BKM – 1 என்ற ரகம் மிகப் பழையது. மெலடி என்ற ரகம் அதிக விளைச்சல் கொடுக்கக்கூடிய ரகமாக உள்ளது. ஒரு ஏக்கருக்கு 20 முதல் 25 டன் வரையில் விளைச்சல் தரக்கூடியது. இதனுடைய சாகுபடி காலம் சரியாக 60 நாட்கள் மட்டுமே. இந்த இரண்டு மாதங்களில் செடி நன்கு வளர்ந்து காய்பிடிக்க தொடங்குகிறது.
சாகுபடி செய்யும் முறைகள்
சாகுபடியை தொடங்குமுன் நாம் எந்த நிலத்தில் சாகுபடி செய்ய உள்ளோமோ அந்த நிலத்தை 5 கலப்பைக் கொண்டு நன்கு உழவு ஓட்டவேண்டும். மண் இறுக்கம் இல்லாத அளவிற்கு மூன்று முதல் நான்கு முறை 5 கலப்பைக் கொண்டு உழவு ஓட்டி மண்ணைத் தயார் செய்ய வேண்டும். பின் ஒரு ஏக்கருக்கு 4 டிப்பர் சாண எரு இடவேண்டும்.
அடுத்து பார் அமைத்தல் முதலில் 5 அடிக்கு 5 அடி என்ற அளவில் குழி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஒவ்வொரு குழியிலும் 4 முதல் 5 விதைகள் நடவேண்டும். இந்த நடைமுறை சொட்டுநீர் பாசனம் பயன்படுத்தும்போது செய்யப்படும் வழக்கமான முறையாகும். இப்போது ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் தொடங்கும்.
மற்றொரு முறை 6 அடிக்கு பார் அமைக்கும்போது வாய்க்காலின் இரண்டு கரைகளிலும் விதைகள் போடும் முறை. இரண்டு அடிக்கு ஒரு செடி விதம் நடவு செய்யப்படுகிறது. இதில் அதிக பட்சமாக ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க தொடங்கும். இவ்வாறு வாய்க்கால் முறை என்பது பச்சை நிற வரிக்காய்கள் சாகுபடியில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.
அடுத்து 6 அடிக்கு ஒரு பாத்தி அமைத்து அதில் இரண்டு அடிக்கு ஒரு செடி விதம் நடவு செய்யப்படுகிறது. பொதுவாக வாய்க்கால் பாசனத்தில் சாகுபடி செய்யப்படும் முறையை விட சொட்டுநீர் பாசனத்தின் மூலம் சாகுபடி செய்யும்போது விளைச்சல் அதிகமாக கிடைக்கிறது. அதே சமயத்தில் நோய்த்தாக்கும் வாய்ப்பும் குறைகிறது.
விதைத் தேர்வு
அதிக விளைச்சல் எடுக்க தரமான விதைகளைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியமான விடயம். அதற்க தரமான விதைகள் தேர்வு செய்து சரியான முறையில் விதை நேர்த்தி செய்து பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ முதல் ஒன்றரைக் கிலோ விதைகள் தேவைப்படும். அடர் பச்சை ரகத்தை பொறுத்தவரை அதாவது சுகர்பேபி மற்றும் மெலடி என்ற ரகமானது ஒரு ஏக்கருக்கு 500 கிராம் விதைகள் தேவைப்படும்.
களைச்செடிகள் மேலாண்மை
வாய்க்கால் பாசன முறையில் அதிக அளவு களைச்செடிகள் வளரும். இதனால் அதிக அளவு நோய்த்தாக்குதலும், பூச்சிகளும் மற்றும் பூழுக்களாலும் பாதிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு களைக்கொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டி வரும். அல்லது களைகளை அகற்றுவது கூடுதல் வேலையாட்கள் தேவைப்படும். எனவே இந்த பெரும் சவாலை சமாளிக்க சொட்டுநீர் பாசனம் அல்லது மல்ச்சிங் முறையில் பாத்தி அமைக்கும்போது இந்த பிரச்சனை பெரும்பாலும் தவிர்க்க முடிகிறது.
பயிரப்படும் காலம்
பொதுவாக ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வரை நடவு செய்யப்படுகிறது. அதிக கோடை மாதங்களில் பயிரிடும்போது இந்த செடிகளில் அதிக அளவு வைரஸ் தாக்குதல் அதிகமாக இருக்கும். மாறாக நிழல் வலை அமைத்து அல்லது தென்னந்தோப்புகளின் இடையே பயிர் செய்யும்போது எந்த காலத்திலும் பயிர் செய்யலாம். நல்ல விளைச்சலைக் கொடுக்கும்.
பூச்சிகள் மேலாண்மை
தர்பூசணியைப் பொறுத்தவரை பூச்சிகள் மேலாண்மை மிகவும் முக்கியமானது. தர்பூசணி சாகுபடியில் வயலில் ஒரு பூச்சியை காண நேர்ந்தால் கூட உடனடியாக பூச்சியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அலட்சியம் காட்டினால் ஒரே வாரத்தில் வயல் முழுவதும் பூச்சிகள் பரவி செடியை பாதிக்கும். எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது. எனவே எந்த மாதிரியான பூச்சிகள் அல்லது புழுக்கள் பாதித்துள்ளது என்பதைக் கண்டறிந்து மருந்துகள் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.
தர்பூசணிச் செடியை இலைப்பேன்கள் அதிகமாக பாதிக்கும். இதனைக் கட்டுப்படுத்த இயற்கை முறையில் 3G கரைசலும், அக்னி அஸ்திரமும் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம். இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் வயலில் நோய்த்தாக்குதல் ஏற்பட்ட பிறகு அதனைக் கட்டுப்படுத்த முயல்வது பயனற்ற விடயமாகும். அதனால் நோய்த் தாக்குதல் ஏற்படும் முன்பே அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே சிறப்பாக அமையும்.
எனவே செடி நடவு செய்த 15 நாட்களில் இலைப்பேன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 3G கரைசல் மற்றும் அக்னி அஸ்திரம் போன்ற கரைசலை தெளித்துவிட வேண்டும்.
உரங்கள் மேலாண்மை
தர்பூசணியில் நல்ல விளைச்சல் எடுக்க 15 நாட்களுக்கு ஒரு முறை மீன் அமிலம் மற்றும் பஞ்சகாவ்யம் ஆகியவற்றை சொட்டுநீர் பாசனத்துடன் கலந்துவிட வேண்டும். முதலில் காய்க்கும்போது ஒரு ஐந்து காய்கள் வரை விட்டுவிட்டு மற்ற காய்களை அகற்றிவிடும் போது இதனுடைய வளர்ச்சி பெரிதாக சதைப்பற்றுடன் இருக்கும். கிட்டத்தட்ட ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் லாபமாக ஒன்றரை இலட்சம் வரை கிடைக்கும். இதில் மற்ற செலவுகள் போக ஒரு ஏக்கரில் 60 நாட்களில் ஒரு லட்சம் வரை கிடைக்கும்.
உங்கள் பார்வைக்கு:
சப்போட்டா பயிரில் அடர் நடவு முறை
Post Comment