துவரை பயிர்களில் காய்ப்பழுக்கள் மேலாண்மை
துவரை வகை பயிர்களில் பொதுவாக அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்துவது காய்ப்புழுக்கள் ஆகும். இந்த காய்ப்புழுக்கள் ஏற்படுத்தும் சேதம் மிக அதிக அளவில் அசுவினிப் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக காணப்படுகிறது.
பொதுவாக துவரை வகை பயிர்கள் மாணவாரியாக விவசாயிகள் பயிரிடுகின்றனர். மேலும் உழுந்து, தட்டைப் பயிறு மற்றும் நிலக்கடலை போன்றவையும் அதிகமாக பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகிறது. உழுந்து பயிர் என்பது பரவலாக நெல்லுக்கு அடுத்து அதிகமாக பயிரிடப்படும் பயிர் வகையாகும். பொதுவாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது.
மானாவாரி பயிர்கள்
இந்த துவரையானது தனிப்பயிராகவோ அல்லது மற்ற நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு இடையே ஊடுபயிராகவோ பயிரிடப்படுகிறது. பொதுவாக இவை மானாவாரிப் பயிராக பயிரிடுவதால் இந்த துவரைப் பயிர்களில் பயிர் பாதுகாப்பிற்கு விவசாயிகள் பெரும்பாலும் முக்கியத்துவம் அளிப்பதில்லை.
இந்த துவரைப் பயிர்களுக்கு பயிர் பாதுகாப்பு அளிக்காத காரணத்தினால் காய் புழுக்களின் பாதிப்பினால் ஏற்படக்கூடிய விளைச்சல் இழப்பு என்பது அதிகமாக இருக்கிறது. பொதுவாக நான்கு வகையான காய்ப்புழுக்கள் துவரை வகையில் அதிக பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இதனால் பெரிய அளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
இந்த காய்ப்புழுக்களால் ஏற்படும் விளைச்சல் இழப்பு சராசரியாக 30 முதல் 40 சதவிகிதம் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலமாக கண்டறிந்துள்ளனர். எந்த வகையான காய்ப்புழுக்கள் அதிக பாதிப்பினை ஏற்படுத்துகிறது. அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தடுப்பது உள்ளிட்ட விடயங்களை அடுத்து நாம் காண்போம்.
நான்கு வகையான காய்ப்புழுக்கள்
காய்ப்புழுக்களை பொறுத்தவரை துவரையில் நான்கு வகையான புழுக்கள் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன என்று மேலே குறிப்பிட்டோம். அவற்றில் பச்சைக்காய் புழுக்கள் என்பது அனைத்து வகையான பயறு வகை பயிர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த புழுக்கள் துவரையில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.
பச்சைக்காய் புழுக்கள்
இந்த பச்சைக்காய் புழுக்கள் தாய் பூச்சியான தாய் அந்து பூச்சியானது இலைகள் மற்றும் இளம் மொட்டுகளில் தங்கள் முட்டைகளை வைக்கும். இந்த முட்டையிலிருந்து வெளிவரக்கூடிய இளம் புழுக்கள் அங்குள்ள இலைகள் மற்றும் தண்டுகளின் மென்மையான திசுக்களை உண்ணுகின்றன. அடுத்து நன்கு வளர்ச்சியடைந்த பிறகு துவரையின் காய்களை துளைத்துக்கொண்டு உள்ளே செல்லும்.
தனது உடலில் பாதிக்கு மேல் காய்க்கு உள்ளேயும், பாதிப்பகுதி காய்க்கு வெளியேயும் இருந்துகொண்டு காய்களை முழுமையாக சேதப்படுத்துகிறது. இந்த புழுக்களை முறையாக கண்காணிக்காத பட்சத்தில் இந்த பச்சைக்காய் புழுக்கள் மட்டுமே 30 முதல் 40 சதவிகிதம்வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடிய திறன் கொண்டது. இந்த பச்சைக்காய் புழுக்கள் பொறுத்தவரையில் இலையில் உள்ளபோது பச்சை நிறமாகவும், அதுவே பூக்களை சாப்பிடும்போது அதற்கு வேறு நிறத்திலும் காணப்படுகிறது. விவசாயிகள் சில நேரங்களில் இந்த புழுக்களை கவனிக்காமல் விடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
புள்ளி காய்ப்புழுக்கள்
அடுத்ததாக முக்கியமாக அதிகமான பாதிப்புகளை உண்டாக்கக்கூடிய இன்னொரு பூச்சியின் புள்ளி காய்ப்புழுக்கள் ஆகும். தற்போது இப்போது உள்ள காலகட்டங்களில் இந்த புள்ளி காய்ப்புழுக்களின் பாதிப்பு அதிகமாக துவரையில் காணப்படுகிறது. மற்ற காய்ப்புழுக்களை காட்டிலும் அதிகமாக காணப்படுகிறது. இந்த புள்ளி காய்ப்புழுக்கள் பூக்களை ஒன்றாக சேர்த்து அதாவது துவரையில் பொதுவாக பூக்கள் என்பது கொத்தாகவே காணப்படும். இந்த பூக்களை ஒன்றாக பிணைத்து அதற்குள்ளாக இருந்துகொண்டு பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இந்த புழுக்கள் அப்படியே பூக்களை உண்டுவிடுவதால் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.
இன்றைக்கு உலக அளவில் இந்த புள்ளி காய்ப்புழுக்கள் பாதிப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது. இந்த காய்ப்புழுக்கள் துவரை, உளுந்து மற்றும் பச்சை பயிறு உள்ளிட்ட அனைத்து பயிரு வகைகளையும் பாதிக்கின்றன.
நீல வண்ண பட்டாம்பூச்சி புழுக்கள்
அடுத்து நீல வண்ண பட்டாம்பூச்சி இப்பொழுது கடந்த இரண்டு வருட காலமாக இதனுடைய பாதிப்புகள் பல்வேறு வயல்களில் தெரியவந்துள்ளது. நீல வண்ண பட்டாம்பூச்சிகள் பயறு வகை பயிர்களின் இலைகள் மற்றும் இளம் மொட்டுகளில் தங்கள் முட்டைகளை வைக்கின்றன.
இந்த முட்டையிலிருந்து வரக்கூடிய இளம் புழுக்கள் காய்களில் ஓட்டையை போட்டு அதில் உள்ள பருப்புகளை உண்ண ஆரம்பிக்கிறது. இதனால் பெருத்த அளவில் விளைச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் ஏதோ பட்டாம்பூச்சிகள் பறப்பதாக நினைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த நீல வண்ண பட்டாம்பூச்சிகளின் இனப்பெருக்கம் விவசாயிகளுக்கு தங்களின் நிலங்களில் பாதிப்பை உண்டாக்குகிறது என்பது பின்னால்தான் தெரிய வரும்.
காய் ஈக்களின் புழுக்கள்
நான்காவதாக காய் ஈக்கள் துவரை வகை பயிர்களில் அதிக சேதத்தை உண்டு பண்ணுகிறது. கடந்த நான்கு வருடங்களாகவே இந்த காய் ஈக்களின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதை விவசாயிகள் அறிகின்றனர். இந்த காய் ஈக்கள் பொதுவாக காய்களின் மேல்பகுதியில்தான் தங்களை முட்டைகளை வைக்கின்றன. இந்த முட்டையிலிருந்து வரும் இளம் புழுக்கள் ஒரு பென்சில் தடிமனுக்கு வளர்ச்சியடையும்போது காய்களை துளைத்துக்கொண்டு உள்ளே சென்று அதிலுள்ள பருப்புகளை முற்றிலுமாக உண்டு வளர்ச்சியடைகின்றன. இதனால் துவரை பயிர்களில் மிகபெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.
இந்த காய் ஈக்களின் பூழுக்கள் சேதத்திற்கு உள்ளாகும் பருப்புகள் முளைப்பு திறன் குறைந்தும், தரமற்றும் காணப்படும். இந்த காய் ஈக்களினுடைய புழுக்கள் ஏற்படுத்தும் பாதிப்பினால் தமிழ்நாட்டில் 40 முதல் 50 சதவிகிதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே துவரைப்பயிர்களில் அதிக மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வகை காய்ப்புழுக்களை கவனம் செலுத்தாமல் இருந்தால் மிகபெரிய விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
காய்ப்புழுக்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளை எவ்வாறு தடுப்பது குறித்து அடுத்து விரிவாக காண்போம். விவசாயிகள் தொடர்ச்சியாக தங்கள் நிலங்களில் பூச்சிகள் மற்றும் புழுக்களினுடைய பாதிப்புகள் எந்த அளவிற்கு உள்ளது என கவனமுடன் இருக்க வேண்டும். காய்ப்புழுக்களினுடைய பாதிப்பினை கண்டறிந்தவுடன் உடனடியாக அதனை தவிர்ப்பதற்கான வேலைகளில் முழுமூச்சாக இறங்க வேண்டும். இவற்றை கட்டுப்படுத்த முதலில் இயற்கையான முறையில் பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும்.
இல்லையென்றால் இரண்டு முதல் மூன்று வாரங்களில் வயல் முழுவதும் பரவி விளைச்சலில் மிகப்பெரிய சேதத்தை உண்டு பண்ணும். பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகள் விளக்குபொறிகளை பயன்படுத்தலாம். இந்த விளக்குப் பொறியில் எந்த வகையான பூச்சிகள் உள்ளன என்பதைப் பொறுத்து வயலில் எந்த வகையான பூச்சிகள் பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் என்பதை கண்டறிய முடியும். அதற்கு ஏற்றாற்போல தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விளக்கு பொறிகள் ஒரு ஹெக்டருக்கு ஒன்று வைத்தால் போதுமானது.
பொதுவாக பூச்சிகள் மற்றும் புழுக்களின் பாதிப்புகளை கட்டுப்படுத்த விவசாயிகள் இரசாயன மருந்துகளையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். வயலில் உள்ள பொருளாதார சேத நிலையைப் பொறுத்து என்ன வகையான மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். எடுத்த உடனே நாம் இரசாயன மருந்துகள் பக்கம் செல்வதை முதலில் தவிர்க்க வேண்டும்.
இயற்கை முறையில் கட்டுப்படுத்துதல்
முதலில் பிரச்சனைகளை தவிர்க்க இயற்கையான முறையில் வேப்பங்கொட்டை கரைசல் 5 சதவிகிதம் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளின் மீது தெளிக்கலாம். இதனை தெளித்த பிறகு பாதிப்புக் குறையவில்லை என்றால் பேசில்லஸ் துரிஞ்சியன்ஸ் என்ற நன்மை செய்யும் பாக்டீரியாவை பயன்படுத்தி கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். இந்த பாக்டீரியாவை ஒரு லிட்டருக்க இரண்டு கிராம் என்ற அளவில் கலந்து ஒட்டு பசை சேர்த்து தெளிக்க வேண்டும்.
மேலும் ஐந்திலைக் கரைசல் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் அல்லது வேப்ப எண்ணெய் கரைசலை தண்ணீரில் கலந்து பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக காய் ஈக்களின் புழுக்கள் பாதிப்பு அதிகமாகும்போது கண்டிப்பாக இதில் ஏதாவது ஒரு கரைசலைப் பயன்டுத்தி கட்டுப்படுத்திட வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி துவரையில் நல்ல மகசூலை எடுக்க முயற்சிக்கவும்.
உங்கள் பார்வைக்கு:
காய்கறி பயிர்களைத் தாக்கும் செம்பேன் சிலந்திகள்
Post Comment