×

தென்னையில் சேதத்தை ஏற்படுத்தும் காண்டாமிருக வண்டுகள்

காண்டாமிருக வண்டுகள்

தென்னையில் சேதத்தை ஏற்படுத்தும் காண்டாமிருக வண்டுகள்

Spread the love

தென்னை மரங்களின் இளம் பருவத்தில் அதன் குறுத்துக்களை தாக்கி தென்னை மரங்களின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் காண்டாமிருக வண்டுகளை பற்றி இந்த பதிவில் காண்போம். பொதுவாக தென்னை மரக்கன்று வைத்து முதல் நான்கு அல்லது ஐந்த வருடங்களில் இந்த பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. தென்னை மரத்தின் எல்லா நிலைகளிலும் இந்த காண்டாமிருக வண்டுகளிலுடைய தாக்குதல் இருந்த போதிலும் குறிப்பாக அதன் இளம் பருவத்தில் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகின்றன.

காண்டாமிருக வண்டுகள் பெயர்க் காரணம்

காண்டாமிருக வண்டுகள்

இந்த வகையான பூச்சிகள் பார்ப்பதற்கு காண்டாமிருகத்தை ஒத்த முக அமைப்பில் முன் பகுதியில் நீண்ட கொம்புகள் காணப்படுகிறது. இதனுடைய காண்டாமிருக தோற்றத்தின் அடிப்படையில் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. பூச்சியினங்களில் பயிர்களை அல்லது தாவரங்களைத் தாக்கும் பெரிய பூச்சியினங்களில் இதுவும் ஒன்று.

காணப்படும் இடங்கள்

இவற்றினுடைய பெண் பூச்சிகள் வயல்களில் உள்ள பட்டுப்போன மரங்கள் மற்றும் சாண எருக்குழிகள் உள்ளிட்டவற்றில் பொதுவாக தங்களைது முட்டைகளை இடுகின்றன.

இவற்றிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் பட்டுப்போன மரங்களின் திசுக்களை உண்டு பெரிய லார்வா புழுக்களாக மாறுகின்றன. அதே போல சாண எருக்குழிக்குள் இடப்படும் முட்டைகள் சாணத்தின் கழிவுகளை உணவாகக் கொண்டு பெரிய லார்வா புழுக்களாக வளர்ச்சியடைகின்றன. சாண எருவை கிளறி பார்க்கும்போது பெரும்பாலான சமயங்களில் பெரிய அளவிலான புழுக்களை நம்மால் பார்க்க முடியும். இந்த புழுக்கள் காண்டாமிருக வண்டுகளின் லார்வா பருவம் ஆகும்.

இப்படி மக்கிப்போன மரங்கள் மற்றும் சாண எருவை உண்டு வாழும் இதனுடைய லார்வாக்கள் போதுமான வளர்ச்சியடைந்த பிறகு கூட்டுப்புழுக்களாக மாற்றமடையும். பின் கூட்டுப்புழு நிலையிலிருந்து முதிர்ந்த பூச்சியாக வெளிவந்து அருகிலுள்ள செழிப்பான மரங்களை தாக்கி அதனை சேதப்படுத்துகின்றன.

பாதிக்கப்பட்ட மரத்தின் தோற்றம்

காண்டாமிருக வண்டுகள் தென்னை மரத்தின் இளநிலையில் உள்ளபோது தென்னை மரத்தின் இளங்குறுத்துக்களை அதிகம் தாக்கும். இதனால் இளங்குறுத்துக்களை மென்று கடித்து உண்பதால் பாதிக்கப்பட்ட இலைகள் சரியாக விரியாமல் அல்லது ஒரு கத்திரிக்கோலைக் கொண்டு வெட்டியது போன்ற தோற்றத்துடன் அந்த இலைகள் காட்சியளிக்கும். வளரும் தென்னை மரங்களில் இதுபோன்ற இளம் தென்னை மட்டைகள் கத்திரிக்கோல் வெட்டியது போன்ற காட்சியளிக்குமே ஆனால் அவை காண்டாமிருக வண்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே துரிதமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இல்லையேன் முழுவதுமாக மரங்கள் பாதிப்படைந்து தென்னை மரத்தை முழுமையாக இழக்க நேரிடும்.

தென்னை மரத்தின் எல்லா நிலைகளிலும் இந்த காண்டாமிருக வண்டின் தாக்குதல் காணப்பட்டாலும், பெரும்பாலும் இளம் மரங்களையே இவை அதிகமாக தாக்குகின்றன. இந்த வகையான காண்டாமிருக வண்டுகளையும், அதன் லார்வாக்களையும் கட்டுப்படுத்தும் முறைகளை இனி அறிந்துகொள்வோம்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

காண்டாமிருக வண்டுகள்

லார்வாக்களை பூஞ்சானங்களை கொண்டு கட்டுப்படுத்துதல்

பெரும்பாலும் வயல்களில் உள்ள பட்டுப்போன அல்லது மக்கிப்போன மரங்களில்தான் இவை அதிகமாக முட்டையிட்டு வளர்கின்றன என்பதனால் வயல்களில் உள்ள பட்டுப்போன மரங்கள் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் வயல்வெளிகளில் அமைக்கப்படும் உரக்குழிகளை நம்மால் தவிர்க்க முடியாது. எனவே எருக்குழிகளை கிளறி மெட்டாரஸ்யம் என்கிற ஒருவகை பூஞ்சான் இயற்கையாக இவற்றை பாதிக்கக்கூடியவை. எனவே மழைக்காலங்களில் ஒரு கம்பியைக் கொண்டு எருக்கழிவைக் கிளறி அதில் பூஞ்சானக் கரைசலை ஊற்றி விட்டால் அவை அந்த எருக்குழிக்குள் நன்கு வளரும். வளரும் பூஞ்சானம் காண்டாமிருக வண்டின் இளம் லார்வாக்களை இவை பாதித்து அதன் வளர்ச்சியை தடை செய்கின்றன அல்லது அழித்துவிடுகின்றன.

கவர்ச்சி பொறி அமைத்தல்

இரண்டாவதாக காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்த வயல்களில் கவர்ச்சி பொறிகளை அமைக்கலாம். இந்த கவர்ச்சி பொறிகள் ஆண் மற்றும் பெண் பூச்சிகள் இரண்டையுமே கவர்ந்து அதனை மாட்டிக்கொள்ள வைக்கிறது. ஏக்கருக்கு ஒரு கவர்ச்சிப் பொறி போதுமனாது.

இந்த கவர்ச்சி பொறியை எங்க வைக்க வேண்டும் என்றால் நடு வயல்களில் வைப்பதை தவிர்த்து விட்டு வரப்பு ஓரங்களில் வைக்க வேண்டும். இந்த கவர்ச்சி பொறியிலிருந்து வரக்கூடிய ஒருவித வாசம் காண்டாமிருக வண்டுகளைக் கவர்ந்து இழுக்கிறது. ஆண் மற்றும் பெண் பூச்சிகள் இரண்டுமே இந்த கவர்ச்சி பொறியால் ஈர்க்கப்பட்டு வந்த பொறிக்குள் மாட்டிக்கொள்கின்றன.

வயல் வரப்பு ஓரங்களில் வைப்பதால் இந்த காண்டாமிருக வண்டுகள் மட்டுமன்றி வயல்களில் பிரச்சனைகளை உண்டாக்கும் மற்ற வண்டுகளும் இதில் மாட்டிக்கொள்ள உதவியாக இருக்கம். மற்ற வயல்களிலிருந்து உங்களது தோட்டத்திற்கும், அல்லது உங்களுடைய தோட்டத்திலிருந்து அருகிலுள்ள தோட்டத்திற்கும் இந்த வண்டுகள் இடம்பெயர்வது தடுக்கப்பபடும்.

இந்த கவர்ச்சிப் பொறியில் உள்ள மருந்து மூன்று மாதங்களுக்கு தன் செயல்பாட்டில் இருக்கும். பின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த வாசனை திரவத்தை நீங்கள் மாற்ற வேண்டும். இந்த கவர்ச்சி பொறியில் ஒரு பெரிய வாளி போன்ற அமைப்பு இருக்கும். இதில் ஒரு 5 இன்ச் அளவிற்கு நீர் ஊற்றி வைக்க வேண்டும். இரண்டு நாளைக்கு ஒருமுறை இந்த பொறியை ஏதாவது வண்டுகள் மாட்டி உள்ளனவா என்று சோதனை செய்ய வேண்டும். அப்படி ஏதவாது வண்டுகள் மாட்டி இருந்தால் அதனை கவனமாக அகற்றிவிட வேண்டும்.

கவர்ச்சி பொறியை நாமே தயாரிக்கலாம்

இந்த கவர்ச்சி பொறியானது கொஞ்சம் விலை அதிகமானது. எனவே மற்றொரு முறையாக கவர்ச்சிப் பொறியை வேறு வடிவிலும் நாமே தயாரித்து பயன்படுத்தலாம். ஒரு மண் சட்டியை எடுத்துக்கொண்டு அதில் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கினை எடுத்து அதில் 5லி தண்ணீர் கலந்து கொள்ளவேண்டும். அதனுடன் சிறிதளவு ஈஸ்ட் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த கரைசல் ஈஸ்ட்டினால் நொதிக்க ஆரம்பிக்கும். இதிலிருந்து வெளிவருகின்ற ஒருவித புளிப்பு கலந்த வாசம் இந்த காண்டாமிருக வண்டுகளைக் கவரும்.

இந்த வகையான புளிப்பு கலந்த வாசனையால் ஆண் மற்றும் பெண் காண்டாமிருக பூச்சிகள் கவரப்பட்டு நீருக்குள் வந்து விழுந்து பறக்க முடியாமல் இறந்துவிடும். இது போன்ற மண்சட்டியினாலான பொறிகளை வரப்புகளை சுற்றி 20 இடங்களில் வைத்தால் இந்த வகையான காண்டாமிருக வண்டுகளை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.

அந்து உருண்டைகளை பயன்படுத்துதல்

மாற்று முறையாக சிறிய அதாவது ஆறு மாதம் அல்லது ஏழு மாத கன்றாக இருக்கும் பட்சத்தில் கடைகளில் கிடைக்கக்கூடிய அந்து உருண்டைகளை பொடியாக்கி மணலுடன் கலந்து மரத்தின் மையப்பகுதியில் தூவி விடலாம். இந்த வாசனைக்கு பெரும்பாலான பூச்சிகள் வராது. இது ஓரளவிற்கு இந்த காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும். மரங்களை குடைந்து ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து தென்னை மரங்களை நம்மால் காப்பாற்ற முடியும்.

வேப்பங்கொட்டை தூள் பயன்படுத்துதல்

தென்னை மரங்களுக்கு ஒரு வயசுக்கு மேல் ஆகும்போது வேப்பங்கொட்டைத் தூள் 50 கிராம் அல்லது 100 கிராம் எடுத்து தென்னை மரத்தின் குறுத்துப் பகுதியில் தூவி விடும்போது இந்த வண்டுகளால் குறுத்துப் பகுதியில் ஏற்படும் குடைவு அல்லது கடித்தல் ஆகியவை கட்டுப்படுத்த இயலும்.

ஒருவேளை வேப்பங்கொட்டை தூள் இல்லை என்றால் பிப்ரோனில் என்கிற குருணை மருந்து இதனை 10 கிராம் எடுத்துக்கொண்டு அதில் 250 கிராம் மணல் கலந்து அந்த குருத்துப் பகுதியில் தூவி விடுவதால் இந்த வண்டினுடைய தாக்குதலில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்க முடியும்.

உங்கள் பார்வைக்கு:

ஆமணக்கு பயிரில் பூச்சி மேலாண்மை


Spread the love

Post Comment

You May Have Missed