×

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை

Spread the love

2018 முதலாக மக்காச்சோள விவசாயிகள் அதிகமாக மகசூல் இழப்பை எதிர்கொள்ளும் விசயம் என்று பார்த்தால் அது இந்த படைப்புழு பிரச்சனைதான். விவசாயிகள் இந்த படைப்புழுவை பற்றி நன்கு அறிந்துகொண்டிருப்பார்கள். ஏனென்றால் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த படைப்புழு பிரச்சனைகளை அதிக அளவு சந்தித்து வருகின்றனர்.

மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த அனைத்து விசயங்களை இந்த பதிவில் முழுமையாகக் காண்போம். மக்காச்சோள படைப்புழுவால் தாக்குதலுக்குள்ளான தாவரங்கள் எப்படி இருக்கும், அவற்றின் வளர்ச்சி பருவங்கள் என்னென்ன என்ற விடயங்களை முதலில் காண்போம்.

படைப்புழுவினை அடையாளம் காணுதல்

மக்காச்சோள விதைகள் போட்டு அதாவது விதை விதைத்து குறைந்தது 10 அல்லது 12 நாட்களில் உள்ள செடிகளிலேயே இந்த படைப்புழு பிரச்சனைக்கான பாதிப்புகளை காண முடிகிறது. அந்துப்பூச்சிகள் குறிப்பாக பெண் அந்துப்பூச்சிகள் தங்கள் இனத்தை பெருக்குவதற்காக மக்காச்சோள செடிகளுக்கு வருகின்றன.

இந்த பெண் அந்துப்பூச்சிகள் மக்காச்சோள இலைகைளின் மேல்புறத்திலோ அல்லது அடிப்புறத்திலோ தங்கள் முட்டைகளை குவியல் குவியலாக இடுகின்றன. இந்த முட்டைகள் தனித்த நிலையில் இருப்பதில்லை. முட்டை குவியல்களாகவே இடப்படுகின்றன.

ஒவ்வொரு முட்டைக்குவியலிலும் கிட்டத்தட்ட 120 முதல் 150 வரை இருக்கும். இந்த முட்டையிலிருந்து இளம் புழுக்கள் வெளிவருகின்றன. இந்த புழுக்கள் மக்காச்சோளத்தின் தண்டுப்பகுதியில் உள்ள குறுத்துப்பகுதியை துளைத்து உள்ளே செல்கின்றன.

மக்காச்சோள படைப்புழுவின் வாழ்க்கை பருவத்தில் அதன் புழுபருவம் ஆறு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த ஆறு நிலைகளைக் கடந்த பிறகு அடுத்த நிலையான கூட்டுப்புழு பருவத்தை அடைகின்றன. இந்த ஆறு நிலைகளிலும் அவை மக்காச்சோளத்தின் குறுத்துப்பகுதியில் இருந்துகொண்டு செடிகளில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறு நடு குறுத்துப்பகுதியில் அதிக சேதத்தை ஏற்படுத்துவதால் தாவரத்திலிருந்து வளரும் குறுத்து இழைகள் அதிக ஓட்டையுடன் அல்லது கிழிந்த நிலையிலும் காணப்படுகிறது.

இலையின் குறுத்துப்பகுதியில் இருந்துகொண்டு உண்டு அதன் கழிவுகளையும் அங்கேயே விட்டு வைக்கின்றன. இது தாவரத்தின் தண்டினைத் துளைத்துக்கொணடு உள்ளே வாழ்வதால் எந்தவொரு பூச்சி மருந்துகளோ அல்லது பூச்சி விரட்டிகளோ இதனை பாதிப்பதில்லை.

தாவரத்திலிருந்து வெளிவரும் ஆண்பூக்களிலும் இந்த பாதிப்பை உணர முடியும். அதேபோல கதிர்கள் வெளிவரும்போது அதிலும் இந்த படைப்புழுக்களின் சேதத்தை நம்மால் பார்க்க முடியும். கதிர்களில் துளையிடுதல், காய்ந்துவிடுதல் போன்ற நிறைய பிரச்சனை விவசாயிகளால் பார்க்க முடிகிறது. இதுபோல கதிர்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் சந்தைகளில் விற்பனை வாய்ப்பு குறைகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதனுடைய பாதிப்பினால் 60 முதல் 70 சதவிகித மகசூல் இழப்பு ஏற்படுவதாக அறியப்பட்டது.

படைப்புழுவின் வளர்ச்சி நிலைகள்

மக்காச்சோளத்தினை பாதிக்கும் படைப்புழுவில் நான்கு பருவங்கள் உள்ளன. அவை முட்டை பருவம், புழு பருவம், கூட்டுப்புழு பருவம் மற்றும் அந்துப்பூச்சி பருவம் ஆகியவை. இந்த ஒவ்வொரு பருவத்திலும் இந்த உயிரியை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை தெரிந்துகொள்வது அவசியமாகும்.

முட்டைப் பருவத்தில் கட்டுப்படுத்துதல்

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு மேலாண்மை

முட்டைப்பருவத்தில் இவற்றை அழிப்பது என்பது ஒரு சுலபமான வழிமுறையாகும். விவசாயிகள் மக்காச்சோள வயலில் அதனை பார்வையிடும்போது அதன் இலைகளில் முட்டைக் குவியல்கள் தென்படும் பட்சத்தில் அதனை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். காணரம் ஒவ்வொரு முட்டைக் குவியல்களும் இலையின் மேல்புறம் அல்லது அடிப்புறத்தில் இருக்கும் என்று முன்பே பார்த்தோம். எனவே இந்த முட்டைக்குவியல்களில் கிட்டத்தட்ட 120 முதல் 150 முட்டைகள் இருப்பதாக அறிந்துகொண்டோம்.

எனவே இந்த முட்டைக்குவியல்களை அழிக்கும்போது ஒரு முட்டைக்குவியலை அழித்தால் 150 புழுக்களை அழிப்பதாக எடுத்துக்கொள்வோம். இந்த முட்டைப் பருவத்தில் இதனை கண்டறிந்து அழிப்பதன் காரணமாக இதனை எளிமையாக இதன் பாதிப்பினை முறியடித்துவிட முடியும்.

புழுப்பருவத்தில் கட்டுப்படுத்தும் முறைகள்

அடுத்ததாக புழுப்பருவத்தில் இதனை கட்டுப்படுத்துவது கொஞ்சம் கடினம். இதனை கட்டுப்படுத்திட ஒரு சில மருந்துகள் நடைமுறையில் உள்ளன. முதலில் இந்த படைப்புழுவினால் எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல மருந்தினை பயன்படுத்தவேண்டும். உங்கள் வயலில் 100 செடிகளை எடுத்துக்கொண்டு ஆராயும்போது அதில் ஒரு 10 செடிகள் பாதிக்கப்பட்டிருந்தாலே நாம் பூச்சிக்கொல்லி மருந்தகளை பயன்படுத்தவேண்டும்.

ஆரம்பத்தில் 15 முதல் 20 நாட்களுக்குள்ளான செடிகளில் பாதிப்பு இருக்கும்போது குளோரான்ட்ரானிக் லிக்விட் என்ற மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் 3 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். மற்றொரு மருந்து ப்ளுபென்டி அமைட் என்ற மருந்தினை 10 லிட்டர் தண்ணீருக்கு 4 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

பயிரானது 35 முதல் 40 நாட்களாக நிலையில் படைப்புழு பாதிப்பினை பார்க்கும்போது இமான்மெட்டின் பெஞ்சவேட் 10 லிட்டருக்கு 5 கிராம் என்ற அளவிலும் அல்லது ஸ்பைனிட்டோரம் என்ற மருந்தினை 5 கிராம் என்ற அளவிலும் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்த முடியும்.

வேறு முறையில் இதனைக் கட்டுப்படுத்திட மெட்டாரைசியம் என்ற ஒருவகை பூஞ்சானக் கொல்லியைப் பயன்படுத்தியும் இதனை கட்டுப்படுத்திட முடியும். இந்த மருந்தினை ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ விதம் இந்த பவுடரைக் கலந்து தெளிக்கலாம்.

அடுத்ததாக கதிர்பிடிக்கும் பருவத்தில் செடிகள் கிட்டத்தட்ட 6 அல்லது 7 அடிக்குமேல் வளர்ந்துவிடுவதால் மருந்துகள் தெளிப்பதும் சிரமமாக இருக்கும். இந்த பருவத்தில் ஸ்பைனிட்டோரம் அல்லது இமான்மெட்டின் பெஞ்சவேட் என்ற மருந்தில் ஏதவாது ஒன்றினை இதுவரையில் பயன்படுத்தாத ஒன்றை இப்போது பயன்படுத்தலாம்.

காரணம் ஒரே மருந்தினை தெளிக்கும்போது இந்த பூச்சிகளில் இந்த இரசாயனத்திற்கான எதிர்ப்பு சக்தி பெற்றுவிடும். இதனால் இந்த மருந்துகள் பலன் அளிக்காமல் போகக்கூடும். எனவே பூச்சிக்கொல்லி மருந்துகளை மாற்றித்தான் பயன்படுத்த வேண்டும். எனவே சுழற்சி முறையைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் இந்த படைப்புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சிப் பொறி போதுமானது. இந்த இனக்கவர்ச்சி பொறி ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்திழுக்கும். பெண் அந்துப்பூச்சிகளை இந்த பொறிகள் கவர்ந்திழுக்காது. இந்த பொறியில் அகப்படும் பூச்சிகளைக் கொண்டு வயலில் அந்துப்பூச்சிகளின் பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்துகொள்ள முடியும். இதனைக் கொண்டு இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகளை நம்மால் திட்டமிட முடியும்.

கூட்டுப்புழு பருவத்தில் கட்டுப்படுத்தும் முறைகள்

இந்த கூட்டுப்புழு பருவத்தில் கட்டுப்படுத்துவதற்கு நாம் முதலில் மண்ணை தயார் செய்யும்போதே ஒரு ஏக்கருக்கும் 100 கிலோ விதம் வேப்பம் புண்ணாக்கினை மண்ணில் சேர்த்து உழவு ஓட்ட வேண்டும். ஒரு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கினை சேர்ப்பதால் இந்த அந்துப்பூச்சிகளின் கூட்டுப்புழு பருவம் மண்ணில்தான் வளர்கின்றன, இதனால் அவற்றின் வளர்ச்சி மண்ணுக்குள் தடுக்கப்படுகிறது. அப்படியே மண்ணை விட்டு வந்தாலும் அவற்றின் வளர்ச்சியை முடிந்த வரையில் கட்டுப்படுத்துகிறது.

அந்தப்பூச்சி நிலையில் கட்டுப்படுத்துதல்

அந்துப்பூச்சி நிலையில் கட்டுப்படுத்திட இனக்கவர்ச்சி பொறிகளைப் பயன்படுத்தி அவற்றை கட்டுப்படுத்திட முடியும். இப்படி பல்வேறு நிலைகளிலும் இப்பூச்சிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு பல்வேறு நிலைகளில் இதன் பாதிப்பினை கட்டுப்படுத்துவதால் சிறப்பான மகசூலை விவசாயிகள் பெற முடியும். இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 23 முதல் 27 மூட்டை மகசூல் பெற முடிகிறது. மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி நல்ல சிறப்பான மக்காச்சோள பயிரில் விளைச்சலை எடுக்க முடியும்.

உங்கள் பார்வைக்கு:

பருத்தி சாகுபடியில் உள்ள நுட்பங்கள்


Spread the love

Post Comment

You May Have Missed