மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யும் முறை
மரவள்ளி என்ற பயிர்வகை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சேலம், நாமக்கல், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் அதிக அளவு சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சுமார் ஒரு லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 25 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
மரவள்ளிக் கிழங்கு ரகங்கள்
மரவள்ளி பயிரில் பல்வேறு ரகங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக சமவெளிப் பகுதிக்கு ஏற்ற ரகங்கள், இரவைக்கு ஏற்ற ரகங்கள், மானாவாரிக்கு ஏற்றவை, மலைப்பகுதிகளுக்கு ஏற்ற ரகங்கள் என பலவகையான ரகங்கள் பிரித்தறியப்பட்டு நிலப்பகுதிக்கு ஏற்ப ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கோ-2 என்ற மரவள்ளி ரகமானது 1984 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரகத்தினுடைய மகசூல் என்பது ஒரு ஹெக்டருக்கு 37 டன்கள் என்ற அளவில் கிடைக்கிறது. இது ஒன்பது மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் ரகமாகும். இந்த ரகம் பெரும்பாலும் உணவு பொருளாகவும், தொழிற்சாலைகளில் சில உற்பத்தி பொருளாகவும் பயன்படுகிறது.
கோ-3 1993 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ரகமானது 8 மாதங்கள் கொண்ட பயிராகும். மகசூல் என்று குறிப்பிடும்போது ஒரு ஹெக்டருக்கு 42 டன்கள் என்ற அளவில் கிடைக்கும். இந்த வகை கிழங்குகள் நல்ல பருமனாகவும், நீளமாகவும் இருக்கும்.
2007 ஆம் ஆண்டு கோ (டிபி)-5 என்ற ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 28 சதவிகிதம் மாவுச்சத்து உள்ளது. ஒரு ஹெக்டருக்கு 38 டன்கள் என்ற அளவிற்கு விளைச்சல் கிடைக்கும். இந்த ரகம் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் பலவகையான ரகங்கள் சாகுபடி பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன.
மரவள்ளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு
மரவள்ளிக் கிழங்கை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்றும் கேரளாவில்தான் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மரவள்ளியைக் கொண்டு செயல்படக்கூடிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்ட உள்ளன. எனவே மரவள்ளிக் கிழங்கினை அதிகமாக உற்பத்தி செய்து வருகிறோம். மரவள்ளிக்கிழங்கில் அதிக அளவு மாவுச்சத்து நிறைந்தது.
விதைக்கிழங்கை தயார் செய்தல்
மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்வதற்கு முன்பு நல்ல விளைச்சல் மிக்க, தரமான விதைக்கரணைகளை தேர்வு செய்ய வேண்டும். அறுவடை செய்து 11 மாதங்கள் கழித்து நல்ல முற்றிய விதைக்கரணையாக இருக்கவேண்டும். அந்த குச்சிகள் பொதுவாக ஓரளவிற்கு நல்ல அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விதைக்கிழங்கை தேர்வு செய்யும்போது பூச்சிகள் அல்லது நோய்கள் தாக்கம் இல்லாததாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.
அதேபோல விதைக் கிழங்களை நேர்த்தி விதைக்க வேண்டும். கிழங்கை விதைக்கும் முன் டைமீத்தோயேட் என்ற பூச்சிக்கொல்லி மருந்தினை 2 மில்லி 1 லிட்டர் தண்ணீரில் கலந்தும், அதேபோல பூஞ்சானக் கொல்லியான கார்பன்டைஸம் என்ற மருந்தினை நீரில் கலந்து விதைக் கிழங்கினை ஒரு 15 நிமிடம் அதில் ஊற வைக்க வேண்டும். பின் இதனை விதைப்புக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மரவள்ளிக்கு உர மேலாண்மை
அடி உரமாக வேப்பம்புண்ணாக்கு கொடுக்க வேண்டும். இதனால் மண்ணில் வளரக்கூடிய தாவரத்திற்கு எதிரான பூச்சிகளுக்கும், நுண்ணுயிரிகளுக்கும் எதிராக செயல்படக்கூடியது. எனவே மண்ணில் இந்த பூச்சிகளின் பெருக்கம் தடுக்கப்படுகிறது. எனவே யூரியாவை கொடுக்கும்போது யூரியா 40 கிலோ என்றால் வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ என்ற அளவில் அடி உரமாக கொடுத்துவிட வேண்டும்.
சூப்பர் பாஸ்பேட் 225 கிலோ அடிஉரமாக கொடுக்கவேண்டும். சூப்பர் பாஸ்பேட் தேவையான அளவு கொடுக்கும்போது சாகுபடி செய்யும் பயிரானது நன்கு வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் 80 கிலோ பொட்டாஷ் உரத்தை அடி உரமாக கொடுக்க வேண்டும். இதுபோல தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மூன்று உரங்களையும் கொடுத்துவிட்டு பிறகு ஜிப்சம் 100 கிலோ கொடுக்க வேண்டும். இதனால் மரவள்ளிக் கிழங்கின் மகசூல் சிறப்பாக இருக்கும்.
மரவள்ளியைப் பொறுத்தவரை அவற்றிலுள்ள ஸ்டார்ச் அளவைப் பொறுத்து அதன் ரகமானது தீர்மானிக்கப்படுகிறது. எனவே நல்ல தரமான ரகமாக தேர்வு செய்து நடவு செய்யும்போது விளையும் பயிரின் மாவுச்சத்து அளவு அதிகமாக இருக்கும். மகசூலும் அதிகமாக கிடைக்கும். விவசாயிக்கு நிகர வருமானம் அதிகரிக்கும்.
நுண்ணூட்டச்சத்துக்களின் தேவை
மரவள்ளிக்கிழங்கிற்கு நுண்ணூட்டச் சத்துக்கள் அவசியம் தேவை. இதற்கு கசாவா பூஸ்டர் எனப்படும் மரவள்ளிக்கிழங்கு பூஸ்டர் எனப்படும் உரமானது பைகளில் 5 கிலே என்ற அளவில் கிடைக்கிறது. இந்த நுண்ணூட்ட சத்துக்கள் மரவள்ளிக் கிழங்கிற்கு என்றே தயாரிக்கப்பட்டது. இதில் மூன்று பகுதிகள் உண்டு. பேசில்லஸ் சப்டிலஸ் என்ற கலவை, இரண்டாவது வேப்பம்புண்ணாக்கு கலவை ஆகியவை கலந்த பையாக இருக்கும். அடுத்ததாக நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கிய பை இருக்கும்.
இந்த மூன்றையும் முறையாக தயார் செய்த பிறகு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூவாளிக்கொண்டு இலைகள் மீது தெளித்து இலை ஊட்டம் வழியாக கொடுக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு இக்கரைசலை இரண்டு, மூன்று மற்றும் நான்காவது மாதங்கள் இலைவழியாக கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது வழக்கமாக கிடைக்கும் மகசூலை விட 20 சதவிகிதம் அதிகமாக கிடைக்கிறது. எனவே மரவள்ளிக் கிழங்கிற்கு வெறுமனே உரங்கள் மட்டும் வைக்காமல் இந்த மரவள்ளிக் கிழங்கிற்கு என்றே தயாரிக்கப்பட்ட நுண்ணூட்டச் சத்துக்களையும் கொடுக்கும்போது சிறப்பான ஒரு விளைச்சலை பெற முடியும்.
பூச்சிகள் மேலாண்மை
மரவள்ளிக் கிழங்கில் மிகவும் பொதுவான பிரச்சனை மாவுப்புச்சியாகும். இந்த மாவுப்பூச்சியை ஆரம்ப நிலையிலியே கட்டுப்படுத்த வேண்டும். மாவுப்பூச்சியால் குறைவான அளவில் இலைகள் பாதிக்கப்பட்டுள்ள போது வேப்பங்கொட்டை கரைசல் கொண்டு 5 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளில் ஸ்பிரே செய்யும்போது கட்டுப்படும். மாவுப்பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும்போது மீண் எண்ணெய் ரோசின் சோப் 25 கிராம் ஒரு லிட்டருக்கு கலந்து இலையின் மீது தெளிக்கலாம்.
கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மேற்கண்ட கரைசலால் கட்டுப்படுத்த முடியாத சூழலில் இரசாயன மருந்தினை தெளிக்க முயற்சிக்கலாம். தயோமீதாக்சம் அல்லது ஸ்பைரோடெட்ரோமைட் என்ற மருந்தினை 10 லிட்டர் நீருக்கு 3 கிராம் என்ற அளவிற்கு கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். கொடுக்கக்கூடிய இரசாயன மருந்துகளை ஒரே மருந்தாக கொடுக்காமல் மாற்றி மாற்றி கொடுக்க வேண்டும். இவ்வாறு வழங்குவதன் பூச்சிகள் இந்த மருந்துகளுக்கு எதிர்ப்பு தன்மை பெறுவதை தடுக்க முடியும்.
உங்கள் பார்வைக்கு:
துவரை பயிர்களில் காய்ப்பழுக்கள் மேலாண்மை
Post Comment