மிளகாய் சாகுபடி தொழில்நுட்பம்
மிளகாய் சாகுபடியை பொறுத்தவரையில் எல்லா விதமான மண்ணிலும் வளரக்கூடிய பயிர் வகையாகும். குறிப்பாக அமிலம் மற்றும் காரத்தன்மை அதிகமுள்ள நிலங்களில் கூட இது செழிப்பாக வளரும் தன்மையுடையது.
நிலத்தை தயார் செய்தல்
மிளகாய் சாகுபடி செய்வதற்கு முன்பாக நிலத்தை தயார் செய்வது முக்கியம். முதலில் நிலத்தை நான்கு முறை உழவு ஓட்ட வேண்டும். அதற்கு முன்பாக தொழு உரம் தேவையான அளவிற்கு போட்டு உழவு ஓட்டி பாத்தி அமைக்க வேண்டும். பாத்தி அமைக்கும்போது 3 அடி இடைவெளியில் பாத்திகளை அமைக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு செடிகளுக்கும் இடையே இரண்டு அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
செடி வளர்ந்துவரும் நிலையில் நடவு செய்து 25 நாளில் ஒரு முறை செடியைச் சுற்றி வளர்ந்துள்ள களைச்செடிகளை நீக்கவிட வேண்டும். அப்பொழுது ஒரு முறை உரமிட்டு நீர் கட்ட வேண்டும். பின் 45 வது நாளில் மீண்டும் ஒரு முறை களை எடுத்து நீர் கட்ட வேண்டும்.
செடி வளர்ச்சிக்கு இடையில் 40 நாளில் ஒரு முறை நுண்ணூட்ட உரமும், அடுத்து 60 நாளில் ஒருமுறை நுண்ணூட்ட உரமும் கொடுக்க வேண்டும். இதனால் பூக்கள் வைப்பது மற்றும் காய் பிடிப்பும் சிறப்பாக இருக்கும்.
விதைத் தேர்வு செய்தல்
நல்ல தரமான மிளகாய் விதைகளை தேர்வு செய்து அதனை நாற்றுகள் தயார் செய்து நாற்றுகளை 28 நாள் முதல் 30 நாள் வரை அதனை வளரவிட்டு அதற்கு பிறகு அவற்றில் சிறப்பாக வளர்ந்த செடிகளை மட்டும் வயல்களில் உள்ள மேட்டுப் பாத்திகளில் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் தரமான செடிகளை தேர்வு செய்து நடுவதன் மூலம் நிறைய காய்கள் கிடைக்கும் செடிகளை நம்மால் தேர்வு செய்ய முடியும்.
குறிப்பாக கோ-1, கோ-2, கோ-3 வகை ரகங்களும், பி.எம்.கே-1, பி.கே.எம்-1 ரகங்களும் அமில மற்றும் கார மண்ணில் பயிரிட ஏற்ற ரகங்களாக பரிந்துரைக்கப்படுகிறது. இந்த விதைகள் நல்ல முளைப்புத் திறனும், அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்களாகவும் உள்ள்ன.
நோய் மேலாண்மை
மிளகாய் செடியைப் பொறுத்தவரை முதலில் வேர் அழுகல் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தவிர்க்க சிஓசி என்ற மருந்தினை சொட்டுநீர் பாசனத்தின் மூலமாகவோ அல்லது வாய்க்கால் பாசனத்தின் மூலமாகவோ கொடுக்கும்போது இந்த வேர் அழுகல் பாதிப்பு இருக்காது.
அடுத்து மிளகாய் செடிகளில் காய் அழுகல் நோய் ஏற்படும். இந்த காய் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த மேங்கோ செஃப் என்ற மருந்தினை தெளித்து கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் நல்ல தரமான திரட்சியான காய்களை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
அடுத்து மிளகாய் சாகுபடியில் பூச்சிகளில் குறிப்பாக சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். அசுவினிப் பூச்சிகளின் பாதிப்பால் செடிகள் வெகுவாக பாதிப்பு ஏற்படும்.
அடுத்து இலைகளை பாதிக்கக் கூடிய வைரஸ் கிருமியால் ஏற்படும் இலைசுருட்டல் நோயால் அதிகமாக பாதிக்கப்படும். இந்த இலைச்சுருட்டல் பாதிப்பு மிளகாய் சாகுபடியில் மிகப்பெரிய சவாலான விடயம் ஆகும். செடி வளர்ந்து நாளைந்து இலைகள் வருவதற்குள் இந்த இலை சுருட்டல் நோயும் வந்துவிடுகிறது. இதனால் செடியின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும். இதனைக் கட்டுப்படுத்த
சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 3ஜி கரைசல் பயன்படுத்தி கட்டுப்படுத்த முடியும். அல்லது வேப்ப எண்ணெய் அல்லது மீன் அமிலம் தயார் செய்து நீருடன் கலந்து தெளிக்கும்போது இலைசுருட்டல் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும். செய்கையான பூச்சிக்கொல்லி மருந்துகள் அல்லாமல் இயற்கையாக நம்மால் தயாரிக்கப்படும் மருந்துகள் நம்பி தெளிக்கலாம்.
நீர் மேலாண்மை
மிளகாய் சாகுபடியில் நீர் மேலாண்மை என்பது மிகவு முக்கியமான விடயமாகும். மற்ற பயிர்களைப்போல் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்சிட முடியாது. காரணம் மிளகாய் செடிகளைப் பொறுத்தவரை அவற்றின் வேரானது மிகவும் சிறியதாக இருக்கும். இதனால் அதனால் அதிக நீரை எடுக்க முடியாது. எனவே மிளகாய் செடிகளுக்கு அதிகபட்சம் 4 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சி ஆக வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக நீர் கொடுக்கும்போது சிறப்பான முறையில் பூக்கும் திறனும், பூக்கள் அதிகம் உதிராமல் அப்படியே காய்பிடிக்கவும் நீர் மேலாண்மை உதவும்.
அதே நேரத்தில் நிலத்தில் தண்ணீரை தேங்கவிடக் கூடாது. அதாவது மேல் மண் காயும் நிலையில் தண்ணீரை பாய்ச்ச வேண்டும். அதிக அளவு தண்ணீர் தேங்கும்போது வேர் அழுகல் நோயால் பாதிப்பு ஏற்டும். நிலத்தில் குறைவான ஈரப்பதம் இருக்க வேண்டும். நிலத்தில் ஈரப்பதம் குறையும்போது செடிகள் வாட ஆரம்பிக்கும். இதனால் பூக்கள் உடனே ஆரம்பிக்கும். இதனால் பெரிய அளவில் மகசூல் பாதிப்பு ஏற்படும். எனவே தண்ணீரை பொறுத்தவரை 4 நாள் அதிகபட்சமாக 5 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக நீர்ப் பாய்ச்ச வேண்டும்.
உர மேலாண்மை
மிளகாய் சாகுபடியைப் பொறுத்தவரை நடவு செய்யும் முன்னரே அடியுரமாக தொழு உரத்தைக் கொடுத்துவிட வேண்டும். நடவு செய்த 25 நாளில் களையெடுத்து தண்ணீர் கட்டி டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்கள் கொடுக்க வேண்டும். இதனால் செடிக்கு தழைச்சத்து மற்றும் மணிச்சத்து கிடைக்கும். அடுத்து இரண்டாவதாக 45 முதல் 50 வது நாளில் ஒரு முறை களையெடுத்து தண்ணீர் கட்டி இரண்டாவது உரம் கொடுக்க வேண்டும். அடுத்து இலை வழியாக ஸ்பிரேயர் மூலம் கொடுக்க வேண்டும். மேலும் நுண்ணூட்ட உரங்களையும் ஸ்பிரேயர் மூலம் கொடுக்கும்போது நேரடியாக சத்துக்கள் அனைத்தும் இலைகள் மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டு பூக்கள் உதிர்வை தடுக்கவும், சத்தான திரட்சியான காய்கள் கிடைக்கவும் உதவும்.
தொடர்ச்சியாக செடிகளை கண்காணித்தல் அவசியம். செடிகளை பார்வையிடும்போது ஏதவாது செடிகளில் நோய்த் தாக்குதல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்தால் அதனை கட்டுப்படுத்த உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சாறு உறிஞ்சும் பூச்சிகள் தென்பட்டால் உடனடியாக 3ஜி கரைசல் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். செடிகளின் இலைகளில் இலைசுருட்டல் நோய் தென்பட்டால் மீன் அமிலம் அல்லது வேப்ப எண்ணெய் கரைசலை தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.
சரியான முறையில் நீர் மேலாண்மை, உர மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை செய்யும்போது மிளகாய் சாகுபடியில் சிறப்பான நல்ல திரட்சியான தரமான காய்கள் கிடைக்கும், நல்ல மகசூல் கிடைக்கும். இதனால் சந்தையில் விவசாயிகளுக்கு நல்ல விளை கிடைக்கும். அதிக லாபமும் கிடைக்கும்.
பருவத்திற்கு ஏற்ப நல்ல தரமான விதைகளைத் தேர்வு செய்து, நர்ச்ரி முறையில் விதைவிதைத்து நாற்றுகள் தயார் செய்து தரமான நல்ல வளர்ச்சியுடைய தாவரங்களை தேர்வு செய்து நடவு செய்யும்போது மிளகாய் சாகுபடியில் 50 சதவிகிதம் வெற்றி கிடைத்துவிடுகிறது. உர மேலாண்மை, நோய் மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மையை முறையாக கடைபிடிக்கும்போது 50 சதவிகித வெற்றி கிடைத்துவிடுகிறது. மேற்காணும் வழிமுறைகளை கையாண்டு மிளகாய் சாகுபடியில் சிறப்பான விளைச்சலைப் பெற முடியும்.
உங்கள் பார்வைக்கு:
வெண்டைக்காய் சாகுபடியில் தொழில் நுட்பங்கள்
Post Comment