வாழை சாகுபடியில் நோய் மேலாண்மை
வாழை மரங்கள் ஓராண்டில் பலன் தரக்கூடிய தாவரம் ஆகும். மேலும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து இளம் கன்றுகள் கிழங்குகள் வழியாக துளிர்த்து தொடர்ச்சியாக பலன் தரக்கூடிய மரமாகும். எனவே வாழையடி வாழையாக என்ற பழமொழி தமிழ்மொழியில் உண்டு. ஒரு முறை வாழைக் கன்றுகள் நடவு செய்யும்போது அவற்றிலிருந்து தொடர்ச்சியான பலன்களைப் பெற முடியும். சரியான பராமரிப்பு கொடுத்து வளர்த்து வந்தால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் நல்ல மகசூலை எடுக்க முடியும்.
வாழையைப் பாதிக்கும் நூற்புழுக்கள்
வாழையில் குறிப்பாக நான்கு வகையான நுற்புழுக்களின் பாதிப்புகள் இருக்கும். அவை வேர் துளைக்கும் நூற்புழு, வேர் அழுகல் நூற்புழு, சுருள் வடிவ நூற்புழு மற்றும் வேர் முடிச்சு நூற்புழு ஆகியவை ஆகும். இதில் முதல் மூன்று நூற்புழுக்களும் வாழையின் வேர்ப்பகுதியில் ஒரே மாதிரியான பாதிப்புகளையும், அறிகுறிகளையும் ஏற்படுத்தும் புழுக்கள் ஆகும். அடுத்து வேர்முடிச்சு பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் புழுக்கள் வேறு விதமான அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்த நூற்புழுக்கள் பெரும்பாலும் மண்ணில் காணப்படுகின்றன. மேலும் வாழைக் கிழங்குகள் கொண்டு புதிய நாற்றுகளை உற்பத்தி செய்யும்போது பரவக்கூடியது.
நூற்புழுக்கள் பரவும் முறை
எனவே நூற்புழுக்களால் பாதிக்கப்பட்ட கிழங்குகள் கொண்டு அதிலிருந்து நாற்றுகள் தயார் செய்யும்போது இந்த நூற்புழுக்கள் தொடர்ச்சியாக தாவரத்திற்கு பாதிப்பினை உண்டாக்கும். இதனை தவிர்க்க விவசாயிகள் நர்சரிகளில் திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட நாற்றுகளை வாங்கி தங்கள் வயல்களில் நடவு செய்யும்போது இந்த பிரச்சனைகள் முற்றிலுமாக தவிர்க்க முடியும். மாறாக ஏற்கனவே உள்ள கிழங்குகள் கொண்டு நாற்றுகள் தயாரிக்கும்போது இந்த நூற்புழுக்களைத் தவிர்க்க முடியாது.
வாழையைப் பாதிக்கும் நூற்புழுக்கள் அதன் வாய்ப் பகுதியில் ஈட்டி போன்ற கூர்மையான பகுதி ஒன்று உள்ளது. இதன் மூலம் எளிமையாக வேர்களைத் துளைத்து தாவரத்தின் உள்ளே நுழைகிறது. இந்த நூற்புழுக்கள் வேரை மட்டும் துளைப்பதில்லை. மேலும் வேரின் வழியாக இடம்பெயர்ந்து கிழங்குகளையும் துளைத்து உள்ளே சென்று வாழும்.
வாழையில் பாதிப்பு அறிகுறிகள்
இதுபோன்ற பாதிக்கப்பட்ட வேர்களை பார்க்கும்போது நூற்புழுக்களால் ஏற்பட்ட பாதிப்பினால் வேர்களில் சிவப்பான சிறிய கோடுகள் தெரியும். இந்த அறிகுறிகளைக் கொண்டு நமது வாழையில் நூற்புழுக்கள் தாக்கம் இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். அடுத்து இந்த சிறிய சிவப்பு நிறக் கோடுகள் பழுப்பு நிறத்தில் மாறி இறுதியில் கருப்பு நிறத்திற்கு மாறிவிடும். வாழைக் கன்றுகளை நடவு செய்த முதல் நான்கு மாதங்களில் இந்த வேர்கள் சிவப்பு நிறம், பின் பழுப்பு நிறம், பின் கருப்பு நிறத்திற்கு மாறி முற்றிலுமாக ஐந்து மாதங்களில் அழுகிவிடும்.
வேர்கள் பாதிக்கப்படும்போது நாம் எவ்வளவுதான் தண்ணீர் மேலாண்மை செய்தாலும், நல்ல உரங்கள் வைத்தாலும் அவை எடுத்துக்கொள்ளாது. இதுபோன்று நூற்புழுக்களால் பாதிக்கப்பட்ட வாழைக் கன்றுகள் மற்ற வாழை மரங்களைக் காட்டிலும் சரியான வளர்ச்சி அடையாமல் குட்டையாக வளர்ச்சி குன்றி காணப்படும்.
வேர் முடிச்சு நூற்புழுக்கள்
வேர் முடிச்சு நூற்புழுக்களைப் பொறுத்தவரை வாழையின் வேர்களில் வேர் முடிச்சுகளை ஏற்படுத்தும். இந்த நூற்புழுக்கள் தங்கள் கூர்மையான வாய் பகுதியைக் கொண்டு வேர்களை துளைத்து உள்ளே சென்று வேர் பகுதிகளில் உள்ள திசுக்களை மாற்றி அமைத்து ஒரு கூட்டமான திசுக்களாக உருவாக்கும். இதனால் வாழைக்கு கொடுக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் இந்த கூட்டமான மாற்றியமைக்கப்பட்ட செல்கள் பெற்றுக்கொள்ளும். இந்த திசுக்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை அங்கு தங்கி வாழும் நூற்புழுக்கள் பெற்றுக்கொண்டு ஆரோக்கியத்துடன் வளரும். இவ்வாறு வேர் முடிச்சுகளில் வாழும் நுற்புழுக்களில் பெண் புழுக்கள் ஒரு தடவைக்கு 200 முதல் 400 வரை முட்டைகள் வைக்கும்.
தண்டு மற்றும் இலைகள் பாதிப்பு
சில நூற்புழுக்கள் மண்ணுக்கு வெளியே தண்டுப்பகுதி மற்றும் இலைப்பகுதியையும் அதே வாய்ப்பகுதியைக் கொண்டு தாக்கி சேதத்தை உண்டாக்கும். எனவே இலைகள் தேவையான சத்துக்களை இழந்து மஞ்சள் நிறத்தில் பழுத்துவிடும். இவ்வாறு பாதிக்கப்பட்ட மரக்கன்றுகள் வாழைத் தார் வைப்பது மிகவும் தாமதம் ஆகும். தாரினுடைய அளவும் 40 முதல் 50 சதவிகிதம் வரை சிறியதாக இருக்கும். இதனால் விவசாயிகளுக்கு சந்தையில் நல்ல விலைக் கடைக்காமல் நஷ்டமடைய நேரிடும். இதனால் விவசாயிகள் கிட்டத்தட்ட 20 முதல் 80 சதவிகிதம் வரை மகசூல் பாதிக்கப்படும்.
எனவே விவசாயிகள் வாழை நடவு செய்யும்போது கிழங்குகளை பயன்படுத்துகையில் நடவு செய்யும் வாழை கிழங்குகள் நூற்புழுக்கள் பாதிப்பு இல்லாமல் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அப்படி தவிர்க்க முடியாத பட்சத்தில் பாதிக்கப்பட்ட கிழங்குகளை பாதிக்கப்பட்ட பகுதியை முழுமையாக சீவி அகற்றி அதனை இயற்கை அல்லது செயற்கை முறையில் நூற்புழு நீக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். கார்போபிரடான் என்ற மருந்தினை பயன்படுத்தி நூற்புழுக்களை நீக்க பயன்படுத்தலாம். இந்த மருந்தினை ஒரு கிழங்கிற்கு 40 கிராம் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
இயற்கையான முறையில் கட்டுப்படுத்துதல்
இயற்கை முறையில் கட்டுப்படுத்துவதற்கு பேசில்லஸ் சப்டிலஸ் என்ற ஒரு வகை பாக்டீரியா வெற்றிகரமாக இந்த நூற்புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது. இது ஒரு பயிர் வளர்ச்சி ஊக்கி பாக்டீரியா மேலும் இந்த நூற்புழுக்களை கட்டுப்படுத்துவதிலும் சிறப்பாக செயல்படக்கூடியது. எனவே இந்த பாக்டீரியா அடங்கிய நீர்கரைசலில் கிழங்குகளை சிறிது நேரம் ஊறவைத்து பிறகு அதனை நிழலில் உலர்த்தி பிறகு நடவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது வேரின் வழியாக இந்த பாக்டீரியாக்கள் உள்ளே நுழைந்து வளர ஆரம்பிக்கும். இந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளே வளரும்போது மற்ற நோய்த் தாக்குதலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள், பூஞ்சானங்கள் மற்றும் நூற்புழுக்களுக்கு எதிரான ஆன்டிபயாடிக் மருந்துகளை உற்பத்தி செய்து அவற்றை உள்ளே வரவிடாமல் தடுத்துவிடுகிறது.
இயற்கையான உரங்கள் என்று குறிப்பிடும்போது வேப்பம்புண்ணாக்கு ஒரு சிறந்த உரமாகவும், நூற்புழுக்களை கட்டுப்படுத்த ஒரு சிறந்த மருந்தாகவும் உள்ளது. வாழைக் கன்றுகளை நடுவதற்கு முன்பாக வேப்பப்புண்ணாக்கை நடவுக் குழிக்குள் கொடுக்கும்போது அவை மண்ணில் எளிதில் மக்கி செடிக்கு சிறந்தாக உரமாக மாறுகிறது. அதே சமயத்தில் அவற்றிலுள்ள ஏராளமான வேதிச்சேர்மங்கள் இந்த நூற்புழுக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி அவற்றை அழிக்கின்றன.
இயற்கை முறையில் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் மற்றொரு முறை வாழைக் கன்றுகளை நடவு செய்த பகுதியைச் சுற்றி மேரிகோல்டு எனப்படும் சாமந்தி செடிகளின் விதைகளை அடர்த்தியாக விதைக்க வேண்டும். பின் ஒன்று ஒன்றைரை மாதங்களுக்குள் அந்த செடிகள் பூக்கும் அளவை எட்டுவதற்குள் அவற்றை வேருடன் பரித்து அதனை வாழையைச் சுற்றி உரமாக மண்ணில் போட்டுவிடும்போது அவை இயற்கையாக நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தும் திறனை பெற்றுள்ளன. ளை நடவு செய்யவேண்டும். இந்த வகையிலும் வாழையை பாதிக்கும் நூற்புழுக்களை எளிமையாக கட்டுப்படுத்தி விவசாயிகள் வாழையில் சிறப்பான மகசூலை எடுக்க முடியும்.
உங்கள் பார்வைக்கு:
மாவில் அடர் நடவு முறை தொழில்நுட்பம்
Post Comment