×

தக்காளிச் செடியில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள்

தக்காளிச் செடியில் பூச்சி

தக்காளிச் செடியில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள்

Spread the love

காய்கறி பயிர்களில் குறிப்பாக தக்காளி மற்றும் குத்து அவரை செடிகளில் தற்போது விவசாயிகள் அதிகமாக பயன்படுத்தும் இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்த்துவிட்டு இயற்கையான முறையில் தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்களில் தாக்குதலை ஏற்படுத்தும் பூச்சிகளை எவ்வாறு இயற்கையான முறையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை அடிப்படையில் கட்டுப்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.

காய்கறிப் பயிர்களில் குறிப்பாக தக்காளி, அவரை, கத்தரி மற்றும் மிளகாய் போன்ற செடிகளில் அதிக அளவு பூச்சித் தாக்குதல் இருக்கும். இதனால் விவசாயிகள் அதிக அளவு மகசூல் இழப்பைச் சந்திக்கின்றனர். பொதுவாக இப்பயிர்களின் தாக்குதல் குறிப்பாக தக்காளி நடவு செய்தது முதல் அதிகமான பூச்சிகளால் பாதிக்கப்படுகின்றன.

தக்காளிச் செடியை பாதிக்கும் பூச்சிகள்

தக்காளிச் செடியில் பூச்சி

குறிப்பாக அஸ்வினிப் பூச்சிகள், மாவுப்பூச்சிகள், வெள்ளை ஈக்கள் போன்றவை அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் இவற்றின் பூ பூக்கும் பருவத்திலும், காய்க்கும் பருவத்திலிரும் காய்ப்புழுக்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அதே போன்று பாக்டீரிய வாடல் நோய் மற்றும் வைரஸ் நோய்கள் மற்றும் பூஞ்சான நோய்கள் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றன.

இதுபோன்ற பாதிப்புகளை செடிகளில் விவசாயிகள் பார்த்தவுடன் இரண்டு அல்லது மூன்று பூச்சிக்கொல்லி மருந்தினை ஒரே நேரத்தில் கலந்து தெளிக்கிறார்கள். இதில் நோயின் தீவிரம் எந்த அளவிற்கு உள்ளது, முழுமையாக நோய் தாக்கம் தடுக்கப்பட்டதா என்று பார்க்காமல் தொடர்ச்சியாக விவசாயிகள் இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள்

அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தும் போது அந்த பூச்சிக்கொல்லிகள் காய்கறிப் பயிர்களின் மேல் படியும் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இது எஞ்சிய பூச்சிக்கொல்லி மருந்துகள் எனப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் தாக்குதலை ஏற்படுத்தும் பூச்சிகளை கொல்வதோடு கூடவே நுகர்வோருக்கம் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் நேரடியாக அல்லது மறைமுகமாக இதனை உண்ணும் மனிதன் மற்றும் விலங்குகளை பாதிக்கிறது. மேலும் விவசாய நிலமும் நஞ்சாக மாறிவிடுகிறது.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்

எனவே இந்த பிரச்சனையைத் தவிர்க்க மாற்று அணுகுமுறை அவசியமாகிறது. இதன் நோக்கம் இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை குறைப்பது அல்லது முடிந்த வரை தவிர்ப்பது என்பதுதான் இதன் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். பொதுவாக தக்காளிச் செடியானது அதிக அளவு பாக்டீரிய வாடல் நோயால் பாதிக்கப்படுகிறது. ஆனால் பாக்டீரிய வாடல் நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி தக்காளிச் செடியில் இல்லை. மேலும் பாக்டீரிய நோய் மட்டுமல்லாது ஒரு சில வைரஸ் நோய்களாலும் தக்காளிச் செடிகள் பாதிக்கப்படுகின்றன.

தக்காளி செடியில் இதுபோன்ற நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்திக்கான மரபணு தக்காளி செடியில் இல்லை. எனவே இவற்றில் அவற்றிற்கு ஆதரவான மரபணுக்களை புகுத்துவது முடியாது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தக்காளி ரகங்களை உருவாக்க முடியாது.

இந்த பிரச்சனையைத் தவிர்க்க குறிப்பாக தக்காளியில் இவற்றிற்கான நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்று முன்பே பார்த்தோம். ஆனால் கத்திரி செடியில் பாக்டீரிய வாடல் நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கிறது. எனவே இதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ரகங்களை தேர்வு செய்து அதனுடைய வேர் பகுதியை மட்டும் பயன்படுத்தி கொள்ள முயற்சி செய்யவேண்டும். அதாவது ஒட்டுக்கன்று என்ற தற்போது பெரும்பாலும் நடைமுறையில் உள்ள முறையை பயன்படுத்தலாம்.

ஒட்டுக்கன்று உற்பத்தி தொழில்நுட்பம்

கத்திரியின் வேர்பகுதியும், தண்டு பகுதி தக்காளியுமாக ஒட்டுக்கன்று உருவாக்க வேண்டும். இம்முறையில் எந்த தக்காளி ரகத்தையும் நாம் பயன்படுத்தலாம். அதாவது கத்திரிச் செடியின் வேர்ப்பகுதியையும், தக்காளியின்தண்டுப்பகுதியையும் ஒட்டுக்கட்டுதலில் பயன்படுத்த வேண்டும். இந்த இரண்டு செடிகளினுடைய விதைகளையும் ஒரே நேரத்தில் விதையிட்டு வளர்க்கும்போது ஒரே நேரத்தில் ஒரே அளவுடைய அல்லது பருமனுடைய இளஞ் செடிகள் கிடைக்கும்.

மாறாக வெவ்வேறு காலங்களில் விதை முளைக்க வைத்த செடிகளை ஒட்டுக்கட்ட முடியாது. காரணம் ஒரு செடியினுடைய தண்டுப் பகுதி பெரியதாகவும், ஒரு செடியினுடைய தண்டு பகுதி சிறியதாகவும் இருந்தால் ஒட்டுக்கட்டுவது சாத்தியப்படாது. எனவே ஒரே நேரத்தில் விதைகள் போட்டு நாற்றுகள் உற்பத்தி செய்து மூன்று அல்லது நான்கு வாரம் வளர்ந்தவுடன் இப்பொழுது இந்த கத்தரிச் செடியும், தக்காளிச் செடியும் ஒரே அளவுள்ள தண்டுப் பகுதியாக தேர்வு செய்து கத்தரிக்காயின் நுனிப்பகுதியை நீக்கிவிட்டு அதன் மேல் பகுதியில் வேர் நீக்கப்பட்ட தக்காளிச் செடியின் தண்டுப்பகுதியை ஒட்டுக்கட்ட வேண்டும்.

இப்போது இதுபோன்ற ஒட்டுக்கட்டு முறைக்கு சிறிய அளவிளான நவீன கிளிப்புகள் கிடைக்கின்றன. இதனை பயன்படுத்தி எளிமையாக இரண்டு செடிகளையும் இணைக்க முடியும். இதனால் இரண்டு செடிகளும் ஒன்றாக வளர்வதற்கு அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன.

இவ்வாறு ஒட்டுக்கட்டும்போது ஒரு வாரம் முதல் பத்து நாள்களில் இந்த ஒட்டுக்கட்டிய இரண்டு செடிகளும் இணைந்து ஒரே செடியாக வளர ஆரம்பிக்கின்றன. இதுபேன்று ஒட்டுக்கட்டிய தாவரச் செடியில் பாக்டீரிய வாடல் நோய்க்கு எதிரான எதிர்ப்புச் சக்தி இப்போது இந்த தக்காளிச் செடிக்கு கிடைக்கிறது. இந்த செடிகள் மழைக்காலங்களில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக வயலில் தண்ணீர் தேங்கி நின்றாலும் அவற்றிற்கான தாங்கும் திறனை இச்செகடிகள் பெற்றுள்ளன. நல்ல எதிர்ப்பு திறனை பெற்ற செடிகளாக இவை இருக்கின்றன. இச்செடிகள் எளிதில் அழுகிப்போவதில்லை. பிறகு தண்ணீர் வடிந்தவுடன் எப்பவும் போல துளிர்த்து வளர ஆரம்பிக்கின்றன. எனவே இவை வளமான செடிகளாக இவை பூக்கும் காலங்களிலும் சரி, காய்க்கும் காலங்களிலும் சரி பசுமையாக ஆரோக்கியமான செடிகளாக பலன் தரக்கூடியவயைக உள்ளன.

ஒட்டுக்கட்டுவதால் ஏற்படும் நன்மைகள்

இதுபோல ஒட்டுக்கட்டிய செடிகள் எதிர்ப்பு சக்தி கொண்ட செடிகளாக இருக்கின்றன. மேலும் பூக்களிலிருந்து மிக விரைவாக காய்கள் பிடிக்கின்றன. விரைவாக இக்காய்கள் திரட்சியாக அறுவடைக்கு தயார் ஆகின்றன. மேலும் அறுவடைக்கான காய்களினுடைய அளவு அதிகரிப்பதோடு வழக்கமாக காய்க்கும் அளவை விட 20 சதவிகிதம் அதிக மகசூல் கிடைப்பதாக விவசாய மக்களால் ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளன.

மேலும் வழக்கத்திற்கு மாறான நல்ல விளைச்சல் மற்றும் இப்பழங்களின் தரம் அதிகமாக இருப்பதாகவும் விவசாயிகள் குறிப்பிடுகின்றனர். இதனால் சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

உயிரியல் பூஞ்சானங்களை பயன்படுத்துதல்

அது மட்டும் இல்லாமல் தக்காளிச் செடிகளில் ஏற்படும் மற்ற பூச்சிகளை மிக சுலபமாக உயிரியல் பூச்சிக்கொல்லிகள் கொண்டு எளிமையாக கட்டுப்படுத்தலாம். குறிப்பாக ஒரு சில வகை உயிரியல் பூஞ்சானங்கள் இயற்கையாக தக்காளிச் செடியை தாக்கும் பூச்சிகளுக்கு எதிராக அவற்றை அளித்து பயிர்களை காக்கின்றன. இந்த பூஞ்சானங்களை பயன்படுத்தி இயற்கையான முறையிலே இப்பூச்சிகளை கட்டுக்குள் கொண்டு வரலாம். மற்றொன்று விதை நேர்த்தி செய்வது. விதைப்பதற்கு முன்பாக அதனை டிரைக்கோடெர்மா விரிடி போன்ற பூஞ்சான கலவையுடன் சேர்த்து கலந்து விதைக்கும்போது வேர்ப்பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை அவை குறைக்கின்றன. இதனால் வேர் அழுகல் நோய் தடுக்கப்படுகிறது.

இந்த ஒட்டுக்கட்டும் முறை மற்றும் விதை நேர்த்தி செய்யும் முறையை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தக்காளி மற்றும் கொத்து அவரை பயன்படுத்தும் விவசாயிகளும் பயன்படுத்தும் நல்ல பலன் கிடைக்கும். இப்போதுள்ள நவீன தொழில் நுட்பங்கள் விவசாயத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுபோன்ற இயற்கையான முறையில் பூச்சிகள் மேலாண்மை செய்து நல்ல விளைச்சலையும், நல்ல வருமானத்தையும் விவசாயிகள் அடைய வேண்டும்.

இதுபோன்ற செயல்முறைகள் ஏற்கனவே மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும், அதே மாதிரி கிழக்கு ஆசிய நாடுகளான கொரியா, ஜப்பான், தைவான் போன்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வந்து பலன் பெற்றிருக்கிறார்கள்.

அதனால் ஏற்கனவே வெற்றிகரமாக அனுபவபூர்வமாக விவசாயிகளுக்கு சாத்தியமான மற்றும் இயற்கையான இந்த தொழில்நுட்பத்தை விவசாயிகள் அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம். நமது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள காலச்சூழலுக்கு ஏற்ப மேலும் பயிர்களுக்கு ஏற்ப இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி விவசாயிகளுக்கு அனுபவப்பூர்வமான ஒரு விளக்கத்தை அளிக்க வேண்டியது அவசியமாகும்.

உங்கள் பார்வைக்கு:

காய்கறி பயிர்களைத் தாக்கும் செம்பேன் சிலந்திகள்


Spread the love

Post Comment

You May Have Missed