சிறுதானியங்கள் சாகுபடி மற்றும் வகைகள்
பழங்காலந்தொட்டே நம்முடைய முன்னோர்கள் தங்களுடைய உணவு பட்டியலில் சிறுதானியங்களுக்கு ஒரு முக்கிய இடத்தை கொடுத்துள்ளனர். சிறுதானியங்கள் என்று குறிப்பிடும்போது குறிப்பாக கம்பு, சோளம், கேள்வரகு, சாமை, திணை, பனிவரகு, குதிரைவாலி போன்ற உணவுப் பயிர்கள் முக்கிய உணவு பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்த சிறுதானிய உணவுகள் நமது முன்னோர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்தது. அவர்கள் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்றால் இந்த சிறுதானிய உணவுகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
சிறுதானியங்களை முழுதாக அறிந்திருந்த முன்னோர்கள்
இந்த சிறுதானிய உணவுகள் உண்ணும் பழக்கம் எப்பொழுது மாறியது என்றால் இந்தியாவில் பசுமைப்புரட்சி ஏற்பட்ட பிறகு நெல் மற்றும் கோதுமை உற்பத்தி அதிகமாக பயிரிட ஆரம்பித்ததிலிருந்து மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. காரணம் நெல் மற்றும் கோதுமையின் தேவை அதிகரிக்கும்போது விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த திணைப் பயிர்கள் பயிரிடுவதை நிறுத்திக்கொண்டு நெல் மற்றும் கோதுமை வகைகளை அதிகமாக பயிரிட்டதன் காரணமாக தேவை குறைந்ததன் பின்னயில் இச்சிறு தானியங்கள் நுகர்வும் குறையத் தொடங்கியுள்ளது. காலப்போக்கில் நாம் சிறுதானியங்களை முற்றிலுமாக மறந்து உணவு என்றாலே அது நெல்வகை உணவுதான் என்று மாற்றிக்கொண்டு விட்டோம்.
சிறுதானியங்களின் நன்மைகள்
சிறுதானிய பயிர்களை உண்பதன் மூலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக பலன்களை அடைய முடியும். காரணம் இதிலுள்ள நார்ச் சத்துக்கள் ஆகும். குறிப்பாக கம்பு வகையில் பாலில் இருப்பதை விட இரண்டு மடங்கு புரதச்சத்து காணப்படுகிறது. அதே போல கேழ்வரகில் மூன்று மடங்கு புரதச்சத்து காணப்படுகிறது. மேலும் சோளம் வகையில் அதிக அளவு பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் ஃபோலிக் அமிலமும் அதிகமாக காணப்படுகிறது. கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகமாக காணப்படுகிறது.
கால்சியம் சத்து குழந்தைகளுடைய எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் ஆர்த்ரைட்டிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படாமல் இந்த கால்சியம் பாதுகாக்கிறது. மேலும் கேழ்வரகில் பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் அதிகமாக உள்ளது. மேலும் குதிரைவாலி தற்போது நிறைய இடங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த குதிரைவாலியில் அதிக அளவு இரும்புச் சத்து காணப்படுகிறது. எனவே தான் இந்த குதிரைவாலி பொருளை குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் உணவுகளில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.
அதே போல வரகு எனப்படும் திணை வகையில் அதிக அளவு நார்ச்சத்தும், போலிக் அமிலமும் காணப்படுகிறது. வரகில் மெக்னீசியச் சத்தும் அதிகம் காணப்படுகிறது. மேலும் சிறுதானியங்களில் வைட்டமின்-B அதிகமாக காணப்படுகிறது. மேலும் நன்மைகள் மிகுந்த கொழுப்பும் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக சிறுதானியங்கள் சிறுவயதினர் முதல் வயதானவர்கள் வரையில் அனைவருக்குமான ஒரு சத்துள்ள உணவாக இந்த வகை உணவுகள் பார்க்கப்படுகின்றன.
சிறுதானியங்களுக்கு ஏற்ற நிலங்கள்
சிறுதானியங்கள் பொதுவாக மானாவாரி பயிராகத்தான் பயிர் செய்கிறார்கள். இந்த மானவாரி பயிர்கள் விளையும் மண்ணானது ஊட்டச்சத்துக்கள் பெரிதாக இல்லாத மண்ணாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்திலும் அதனை தாங்கி வளரக்கூடிய ஒரு முக்கிய உணவுப் பயிர்களாக இந்த தினை வகைகள் உள்ளன. நெல் விளைவதற்கு அதிக அளவு தண்ணீர் தேவை. ஆனால் இந்த சிறுதானியங்கள் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய அதிக அளவு லாபம் தரக்கூடிய வகைகளாகும்.
இந்தியா போன்ற வெப்ப மண்டலப் பகுதியில் குறிப்பாக தமிழ்நாடு பகுதியில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ற வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை இந்த சிறுதானியப் பயிர்கள். குறைவான தண்ணீர் தேவையும், பெரிய அளவில் பூச்சித்தாக்குதல் மற்றும் பெரிய அளவில் நோய் தாக்குதல் இல்லாமல் மகசூல் அளிக்கக்கூடியவை இந்த சிறுதானியப் பயிர்கள்.
சர்வதேச சிறுதானிய ஆண்டு
இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட சிறுதானிய பயிர்களை ஊக்குவிக்கறதுக்காக இந்திய அரசாங்கம் 2021 ஆம் வருடங்களிலேயே மார்ச் 5 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் இதன் முக்கியத்துவம் பற்றிய உரையாடலை முன் வைத்தது. அதன் விளைவாக 2023 ஆம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்தது. இதன் வாயிலாக உலக மக்களுக்கு சிறுதானியங்களுடைய முக்கியத்துவத்தை அறிவிக்கும் வண்ணம் இந்த அறிவுப்பு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 21 மாநிலங்களில் பரவலாக இந்த சிறுதானியங்களை பயிர் செய்து கொண்டு வருகிறார்கள். 12.53 மில்லியன் ஹெக்டர்ஸ் பரப்பளயில் சிறுதானியங்களை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் மானாவாரி நிலப்பகுதிகளில் பரவலாக இச்சிறுதானியப் பயிர்கள் பயிரப்படுகிறது. இதன் உற்பத்தியை மேலும் அதிகப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கமும், தமிழ்நாடு அரசாங்கமும் முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.
சிறுதானிய ரகங்கள்
உதாரணத்திற்கு சோளம் ரகத்தில் கோ 32 மற்றும் கோ 12 என்ற இரண்டு வகை பரவலாக தமிழ்நாட்டில் பயிரிடப்பட்டு வருகிறது. கம்பை பொறுத்தவரையில் கோ 10 என்ற ரகம் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பயிரிடப்பட்டு வளர்த்து வருகிறார்கள். அதே போல் கம்பில் ஒட்டுரகம் கோ 9 என்ற வகையில் இப்பொழுது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சிறுதானிய வகைகளில் கேழ்வரகு, சாமை, திணை, பணிவரகு, குதிரைவாலி, வரகு உள்ளிட்ட அனைத்திலும் ஏடிஎல் 1 என்ற பெயரில் விதைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அடுத்த ஐந்து ஆண்டுகளாக திட்டங்களாக செயல் வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக நல்ல ஊட்டச்சத்துள்ள நிறைந்த நல்ல விளைச்சல் அளிக்கக்கூடிய ரகங்களை அறிமுகப்படுத்தி சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகப்படுத்துவதுதான் இதன் முக்கிய நோக்கமாகும்.
இரண்டாவது சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு வருவது. எவ்வாறு விளைச்சலை பெருக்குவது, எவ்வாறு சந்தைப்படுத்துவது உள்ளிட்டவையும், நேரடியாக சந்தைப்படுத்தாமல் எவ்வாறு அவற்றை மதிப்புக்கூட்டி அதிக லாபத்தை ஈட்டுவது உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
திறன் மேம்பாட்டு பயிற்சிகள்
சிறுதானியங்களை பொறுத்தவரையில் விதைத்தேர்வு என்பது மிகவும் முக்கியம். நமது வெப்ப மண்டல பகுதிக்கு ஏற்ற வறட்சியை தாங்கி வளரக்கூடிய ரகங்களை தேர்வு செய்து நடவு செய்யும்போதுதான் அதிக மகசூலை எடுக்க முடியும் என்கிற போது நாம் கூடுதல் கவனம் கொடுக்க வேண்டிய விதைத் தேர்விற்குதான். மேலும் சிறுதானியங்கள் வளர்ப்பு பற்றிய திறன்மேம்பாட்டு பயிற்சியானது சிறுகுறு விவசாயிகளுக்கு அரசால் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பயிற்சியில் விவசாயிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் பெற்று நல்ல முறையில் சிறுதானிய பயிர்களை வளர்த்து நல்ல லாபத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.
மேலும் சிறுதானிய பயிர்களை எவ்வாறு மதிப்புக்கூட்டிய பொருள்களாக மாற்றுவது அதனை எவ்வாறு சந்தைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. விளைச்சலுக்கு பின் செய்யவேண்டிய நடைமுறைகள் என்ன உள்ளிட்ட பல தகவல்களை இங்கு பெற முடியும்.
விவசாய பெருங்குடி மக்கள் தங்கள் நிலங்கள் அல்லது தோட்டங்களில் ஒரே மாதிரியான பயிர்களை தொடர்ச்சியாக பயிர் செய்வதை விடுத்து மாற்று பயிரிடுதல் என்ற தொழில் நுட்பத்தை செயல்படுத்தும்போது நிலத்தின் வளமும் அதிகரிக்கிறது, மேலும் பயிர்களுக்கு ஏற்படும் பூச்சித்தாக்குதல் உள்ளிட்ட பிரச்சனைகளும் இந்த பயிர்சுழற்சி முறையால் தீர்க்கப்படுகிறது.
உங்கள் பார்வைக்கு:
Post Comment